x

46. சிற்றினம் சேராமை

PREV    NEXT

குறள் 451:

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்


விளக்கம்:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

குறள் 452:

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு

விளக்கம்:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

குறள் 453:

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னா னெனப்படுஞ் சொல்

விளக்கம்:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

குறள் 454:

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
கினத்துள தாகும் அறிவு

விளக்கம்:
ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

குறள் 455:

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்


விளக்கம்:
மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

குறள் 456:

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை

விளக்கம்:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

குறள் 457:

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்

விளக்கம்:
மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

குறள் 458:

மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநலம் ஏமாப் புடைத்து

விளக்கம்:
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

குறள் 459:

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

விளக்கம்:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

குறள் 460:

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉ மில்

விளக்கம்:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

PREV    NEXT



Like it? Please Spread the word!