x

119. பசப்புறு பருவரல்

PREV    NEXT

குறள் 1181:

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற


விளக்கம்:
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

குறள் 1182:

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

விளக்கம்:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

குறள் 1183:

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

விளக்கம்:
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

குறள் 1184:

உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

விளக்கம்:
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

குறள் 1185:

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது

விளக்கம்:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

குறள் 1186:

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு


விளக்கம்:
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

குறள் 1187:

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

விளக்கம்:
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!

குறள் 1188:

பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்

விளக்கம்:
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

குறள் 1189:

பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்

விளக்கம்:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

குறள் 1190:

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்

விளக்கம்:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

PREV    NEXT



Like it? Please Spread the word!