x

ஜூலை 26 : தாய் சேய் நலம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


தாய் சேய் நலம் :

“தாய்,சேய் நலம் என்று சொல்கிறபோது அது பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ மாத்திரம் அல்ல; மனித குலத்திற்கே ஒரு பொதுவான, ஒரு மதிப்புடைய விஞ்ஞானம் அது. மனித குல மேன்மைக்காகவே, தாய் – சேய் நலம் என்ற ஒரு பிரிவை எல்லோரும் மதித்து அதற்கு ஒவ்வொருவராலும் ஆக வேண்டிய செயலைச் செய்ய வேண்டியது அவசியம். தாய்க்கும், சேய்க்கும் நோய் வராமல் தடுக்க வேண்டுமானால் கருவுற்ற நாள் முதற்கொண்டு பிரசவம் ஆகிய வரையிலே அதைக் கவனிக்க வேண்டியது பெண்களுடைய கடமை. ஆனால் பெண்கள் மாத்திரம் அதைக் கவனித்துக் கொள்ள முடியாது. குடும்பத்திலே முக்கியமாக உள்ள கணவன் இன்னும் பெரியவர்கள் எல்லோருடைய கடமையும் உள்ளது. அதற்கேற்ற அறிவு அனைவருக்கும் அவசியம்.

கருவுற்ற காலத்தில் ஒரு பெண்ணினுடைய மனம் சோர்வு அடையுமேயானால், பிணக்கு அடையுமேயானால், வருத்தம் அடையச் செய்வோமேயானால், ஒவ்வொரு வருத்தமும் அவர்களின் குழந்தைகளை மனத்தாலே பாதிக்கும். மனம் என்பது கருமையம், சீவகாந்த ஆற்றல், இருப்பு நிலையான அறிவு, இயக்க நிலையான மனம் என்ற அனைத்தும் அடக்கம் பெற்ற ஒரு இயற்கை நிதி. இதை தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்திலே எந்த விதத்திலே ஒரு பெண் ஒரு குடும்பத்திலே இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும் கணவன் எவ்வாறு அக்கருவுற்ற பெண்ணோடு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டார்களா என்றால் தெரிந்து கொள்ளவே இல்லை. அந்தக் காலத்திலே ஏற்படக்கூடிய மனநிலை குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் எனவே விளைவறிந்து செயல்புரிந்து நலம் காண்போம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

இல்லற நோன்பு :

“அன்பு ஊற்றாம் இல்லறத்தில் ஆண்பெண் இருபேரும்

அவரவர்கள் துணைவர்களை மனம் வருந்தச் செய்தால்

துன்ப உணர்வலை எழும்பி தாக்கியோரைத் தாக்கும்

தொல்லைதரும் சாபமாம் நோய்கள் வரும் தேர்வீர்;

இன்ப ஊற்று இருவரிடைப் பெருக வாழ்த்துதலோடு

இன்முகமும் பொறுமை தியாகம் தகைமை காட்டவேண்டும்,

தன்புகழ் விளக்கும் நல்ல தரமுடைய மக்கள்


தழைப்பார்கள், இல்வாழ்வை ஆய்ந்து கண்ட உண்மை.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 27 : உறக்கம்

PREV      :   ஜூலை 25 : இயற்கையின் கருவூலம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!