வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
குடும்ப நல வாழ்த்து:
“ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்துவிடலாம்.
நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், “அவர் அறியாமையினாலேயே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார், அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளே. எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்”, என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகிவிட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * *
நல் வாழ்த்து :
“அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி,
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி;
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு,
நெறியோடு வாழ்க வென அழுத்தமான
நினைவலைகளைப் பரப்பி தவம் செய்கின்றேன்
பொறி புலன்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்.”
வாழ்த்து:
“வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்
வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்
வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்
வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்
வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்
வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி
வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்
வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க
வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞ்ஞானம்!”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூலை 10 : ஐவகைப் பற்று
PREV : ஜூலை 08 : நடிப்புச் சினம்