வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அன்பு – பாசம் :
“அறிவு அவ்வப்போது அடையும் பலவித நிலைகளைத் தனித்தனியே குறிப்பிட்டுக் காட்ட நாம் பல சொற்களை உபயோகிக்கிறோம். அவற்றில் அன்பு, பாசம் என்ற சொற்கள் இருவித நிலைகளை குறிக்கின்றன.
உருவ அளவிலே – பொருள் அளவிலே – ஞாபகம் குறுகி ஒரு பொருள் தனக்குச் சொந்தம் என்று கருதும் கற்பனை மீது எழும் பற்றுதல் நிலையை பாசம் என்று சொல்லுகிறோம்.
ஆராய்ச்சி அறிவின் எல்லையிலே – உயிர் நிலையை அறிந்த உயர்விலே – பேதங்கடந்த பேரறிவின் பெருங்கருணையிலே – ஜீவ இனங்களின் இன்ப துன்ப இயல்பறிந்த சிறப்பான ஞாபகத்திலே – கருத்துக்கு எட்டிய துன்பங்களைக் குறைக்க வழிகான வேண்டும் என்ற கனிவிலே – ஏற்படும் பற்றுதலை அன்பு என்று சொல்லுகிறோம்.
சமுதாயத்திற்கு நான் தொண்டு செய்வேன் என்னும் போது அது அன்பு நிலையாகும். என் மனைவியை – என் குழந்தைகளை பாதுகாக்க முயற்சிப்பேன் என்னும் போது அது பாசம் என்னும் நிலையாகும்.
மனிதர்களுக்கு நிழல் கொடுக்க மரம் வைக்கிறேன் என்றால் அது அன்பின் செயலாகும். எனது கிராமவாசிகளின் சவுகரியத்திற்காக மரம் நடுகிறேன் என்றால் அது பாசம் என்று சொல்லப்படும்.
ஆகவே ஒரு எல்லைக்குட்பட்ட அறிவின் குறுகிய நிலையே பாசம் எனப்படும். அறிவு என்ற தத்துவத்தையும் அதன் இன்ப துன்ப அனுபோக அனுபவங்களையும் அறிந்து பரந்த ஞாபகத்தில் செயல் புரிய எழும் ஆர்வமே அன்பு எனப்படும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * *
“கருணை, அன்பு, ஆராய்ச்சி, காதல், தியாகம்,
காமம், சினம், பயம், வெட்கம், வீரம், சோகம்,
அருவருப்பு, இன்பதுன்பம், ஆசை, பாசம்,
ஆர்வம், தயை, விருப்பு,வெறுப்பமைதி ஞானம்,
கருவம், பக்தி, வைராக்கியம், பொறுமை, மானம்,
கவலை, யுக்தி, யூகம், மாய்கை, இரக்கம்
நிருவிகற்ப மௌனம், மற்றும் எண்ணிறந்த
நிலை குறிக்கும் பெயர்கள் பல அறிவிற்குண்டு”.
“இயற்கையிலே நிகழ்ச்சி யெல்லாம் கணித்துப் பார்க்க
இன்பம் துன்பம் அன்றிப் பயன் வேறுண்டோ?
செயற்கையிலே பயிற்சியினால் துன்பம் தீர்க்கும்
செயலை விடச் சிறந்த துண்டோ மனிதர்கட்கு”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூலை 08 : நடிப்புச் சினம்
PREV : ஜூலை 06 : அலையின் தொடர்பு