x

மே 30 : அருள்துறையின் கருப்பொருள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


அருள்துறையின் கருப்பொருள் :

“அறத்தைக் காக்க வல்ல சிந்தனையாளர்கள், ஆட்சிப் பொறுப்பு உடையோர், செல்வந்தர்கள், தொழில் நிபுணர்கள், மக்கள் தலைவர்கள் யாவரும் இறையுணர்வில் முழுமை பெற வேண்டும். அப்போது தான் மக்களை சீரிய முறையில் வழி நடத்தவும் வாழ வைக்கவும் முடியும்.

இறையுணர்வில் முழுமை பெறுவதற்குச் சிறந்த முறை தன்னிலை விளக்கமாகும். இதனை ஆங்கிலத்தில் Self Realization என்று சொல்வார்கள். இதுவே அருள் துறையின் கருப்பொருள். இறை வழிபாட்டின் உச்சம். உயிர் வழிபாட்டின் உறைவிடம். அமைதியைக் காக்கும் அரண். தன்னிலை விளக்கத்தால் அறிவும் உயிரும் உணரப் பெறும். முடிவில் தெய்வ நிலையும் அகக் காட்சியாகும், தன்னை உணர்ந்தால் உயிர்கள், உலகம், தெய்வம் யாவும் அகக் காட்சியில் இணைந்து காணும் முறையான அக நோக்குப் பயிற்சி மூலம் ஒரு மனிதன் எளிதில் இந்நிலை பெறலாம். இத்துறையில் தேர்ந்த வழிகாட்டிகள் இந்நாட்டில் பலர் உள்ளனர்.

உடலாக அறிவாக உயிராக உள்ள, தன்னிலே தலைவனாக உள்ள மெய்ப் பொருளை உணர்வதே தன்னிலை விளக்கம். இந்தத் தெளிவிலே ஒவ்வொரு உயிரினிடத்தும் தெய்வத்தின் இருப்புநிலை, ஆட்சி நிலை விளங்குமல்லவா? இவ்வுயர்ந்த நோக்கிலே எல்லா உயிர்களும் ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே தோன்றி இயங்கி வாழ்கின்றன என்ற பேருண்மை அகக் காட்சியாகின்றது. இத்தகைய அறிவின் தெளிவிலே, ஒழுக்கமும் ஈகையும் இயல்பாக மலரும் கடமையும் பொறுப்பும் சிறப்பாக அமையும். தனி மனிதன் வாழ்விலே அமைதியுண்டாகும். இவ்வமைதி அன்பாகவும், கருணையாகவும் விரிந்து சமுதாயத்தில் அமைதியைப் பரப்பும். மேலும் அது உலக விரிவாகச் செயல்படும் போது உலக நாடுகளிடையேயும் அமைதியை நிலை நாட்டும். எனவே தன்னிலை விளக்கமும், அவ்விளக்கத்தின் வழியே வாழும் அருள் நெறியும் உலக அமைதிக்குச் சிறந்த வழிகள்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

“நம்மில் தெய்வீகம் மேலோங்கும் போது, இருப்பதை

மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம்

நமக்கு ஓர் அழகைக் கொடுக்கிறது.”

“இறைநிலையே அனைத்துமாகி இருப்பதால்

நமது சுயம் தெய்வீகமானது”.

“உடல் உறையும் உயிரும், உயிரின் – உணர்வுகளின்

பிறப்பிடமான மனமும், அந்த இறைநிலையின் அம்சங்களே”.

சீரமைப்பே சிறந்தது:

“அறிவு நிலை, இயங்குமுறை, விளைவு எல்லாம்

அறியாமல் ஆசைதனை அடக்கிவிட்டால்


அறிவி லெழும் விரைவு திசை மாற்றம் பெற்று

அதன் விளைவாய் அமைதியின்மை உடல் நோயுண்டாம்;

அறிவது தன் தேவை, பழக்கம், சந்தர்ப்பம்

அமைப்புகள் ஒக்க அறுகுணங்களாகும்

அறிவின் நிலை மாற்றம் உணர்ந்தவ் வப்போது

அவற்றை நற்குணமாக்கும் பயிற்சி வேண்டும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மே 31 : அறிஞர் போதனைகள்

PREV      :    மே 29 : இறைநீதி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!