x

மே 28 : மந்திரம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மந்திரம்:

“மனம் ஓர்மை நிலையில் எப்பொருளைத் தீவிரமாக நினைத்தாலும் அப்பொருளாகவே மாறிவிடுகிறது. The mind gets attuned to the level of that thing. இதையே உயிர்க் கலப்பு என்று சொல்கிறோம். அந்நிலையில் நாம் அப்பொருளை மதிக்கிறோம். அதனோடு நட்பை வளர்த்துக் கொள்கிறோம். அப்பொருளின் ஆற்றலை நம் உயர்வுக்குப் பயன் படுத்திக் கொள்கிறோம். இந்த தத்துவந்தான் தெய்வ வணக்கத்திலும் இருக்கிறது. இந்து நாகரிகத்தில் இதை ‘மந்திரம், யந்திரம், தந்திரம்’ என்பார்கள்.

நுட்பமும் வேகமும் பெறுமாறு தன் உயிரினது ஆற்றலை [மனோ சக்தியை] பெருக்கிக் கொள்ளல் – மனதின் திறனை உச்சபட்சமாக உயர்த்திக் கொள்ளல் – மந்திரமாகும். நாம் தவத்தினால் இதைச் சாதிக்கிறோம். மனமாக விரிதலை ஒழித்துத் தன்னில் தானாகவே நிற்கும் உயிர், பின்னால் தன் மூல நிலையையும் எய்தி மீளும் போது அதற்கு தூய்மையோடு வலிமையும், வலிமையோடு தூய்மையும் கிடைக்கின்றன. மெய்ப் பொருளிடம் எந்த மாசும் இல்லை. அதனினும் வலிமைமிக்கது எதுவும் இல்லை. அதனிடம் சென்று அதனுடன் மீளும் உயிருக்குத் தூய்மையும் ஆற்றல் மிகுதியும் இயல்பாகின்றன. இதுவே மந்திரம்.

எழுத்துக்களின் உச்சரிப்பில் அதிர்வியக்கம் ஏற்படுகின்றன. ஒவ்வொரு அதிர்வியக்கமும் உயிரினிடத்தில் ஒவ்வொரு மாறுதலை உண்டு பண்ணுகின்றன. எனவே ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. இதை துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். இவற்றில் பீஜாட்சரம் – வீரிய எழுத்துக்கள் என்று சில இருக்கின்றன. அவற்றின் துணை கொண்டு உயிராற்றலை வளர்த்துச் சக்தி மிகுந்ததாகச் செய்து கொள்ளல் மட்டும் இக்காலத்தில் மந்திரம் என்று வழங்கப்படுகின்றது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம். ஆம். மனமது செம்மையானால் மனமே மந்திரம். செபிக்க வேண்டியதில்லை. மனதிற்குச் செம்மை ஊட்டுவதே மனவளக்கலை.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“வாழ்க வளமுடன்” என்ற வாழ்த்தானது,

எல்லா மந்திரங்களையும் விட

மேலான திருமந்திரமாகும்”.

கருதவம் :

“சத்து எனும் மெய்ப் பொருளின் நிலையுணர்ந்து

சன்மார்க்க வாழ்வு பெற வேண்டு மென்றால்

சித்து எனும் மனமயக்கில் சிக்கிடாதீர்

சிலர் மயங்கித்தரும் பொருளோ புகழோ வேண்டாம்;

வித்துவை நீ கருதவத்தால் வறுக்கும் போது

விளைகின்ற ஈடு இணையற்ற சக்தி

அத்தனையும் அறிவிற்கே ஊட்ட மாக்கி

அறிவறிந்து மக்கள் தொண்டாற்றுவீரே”.

அறிவே தான் தெய்வம் :

“மனதின் அலையை குண்டலினியோகத்தின் மூலம்

குறைத்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைக்குக் கொண்டு வந்து இவனே


அதுவானால் தான், அந்த நிலையில்தான் அறிவே தெய்வம் ஆகும்”

“அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்,

அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி

அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்;

அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்

அறிஞர் திருமூலர், அவ்வறிவில் ஆழ்ந்து

ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்,

அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்

அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மே 29 : இறைநீதி

PREV      :   மே 27 : கடவுள் வணக்கம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!