வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மூலமும் முடிவும்:
“அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால், இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும். சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே. ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும். அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும், உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும். இங்கே தான் மனம் அமைதி பெரும். எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது.
அதனை எந்தப் பொருளிலும், எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில், இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும். அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும் மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும்.
மேலும் பரநிலையுணர்வும், அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது, அறிவு – தான் தனது என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும். தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * *
“அறிவை ஏடுகளில் பெறலாம்;
ஞானத்தை தவத்தால் பெறலாம்”.
“அறிவு என்பது அறியப்படுவது
ஞானம் என்பது உணரப்படுவது”.
“பிரார்த்தனை என்பது நமக்கு நாமே
செய்து கொள்ளும் சங்கல்பம்”.
சுய சரித்திரம் :
“அறிவதனை பக்தி நெறியில் இணைத்து
ஆழ்ந் தொடுங்கி ஒழுக்கத்தால் உயர்ந்த போது
அறிவாலே மெய்ப் பொருளை உணரவென்ற
ஆர்வத்தோ டறிவறிய வேட்பும் ஓங்க;
அறிவுதனை அகத்தவத்தால் நிலைக்கச் செய்தேன்,
ஆதிநிலை மெய்ப்பொருளாய் அதன் இயக்கம்
அறிவாக உணர்ந்து விட்டேன். அப்பேரின்ப
அனுபவத்தை உலகோர்க்குத் தூண்டுகின்றேன்”.
அறிவும் புலன்களும் :
“அறிவைப் புலங்களில் அதிகநாள் பழக்கினேன்,
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன.
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்;
அந்த நிலையிலும் புலன்களை இயக்கினேன்,
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது;
அறிவு புலன்களை அறிந்தது, வென்றது.
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : மே 15 : தனி மனிதன் காப்பு
PREV : மே 13 : மன உறுதி