வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
அருள் வெள்ளம் :
“நமது வாழ்க்கையின் நோக்கம் அமைதியும் நிறைவும் பெற்று வாழ்வதோடு ஆன்ம வளர்ச்சி பெற வேண்டும் என்பதேயாகும். ஆன்ம வளர்ச்சியை முதற் குறிக்கோளாகக் கொண்டால் பிறவெல்லாம் அற்பமாகவே தோன்றும். மனதை நிறை நிலையில் வைத்துக் கொள்வோம். கடமையின் மதிப்புணர்ந்து செயலாற்றி வாழ்வோம்.
உண்மையிலயே ஆன்ம வளர்ச்சியை வேண்டுபவர் சிக்கல்களையும் பிணக்குகளையும் தாண்டி அறிவை சுதந்திரமாக இயங்க விட வேண்டும். விரிந்த பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளையும், மனித வாழ்வையும் இணைத்து ஒத்து சிந்தியுங்கள். தன்முனைப்பு என்ற திரை கரைந்து விடும். தன் முனைப்பும், இயற்கை நியதியறியாமையும் ஒன்றை ஒன்று தழுவி நிலைத்திருக்கின்றன.
இதனால் மனிதன் தன்னிடம் ஒரு கற்பனை மதிப்பை (False Prestige) உருவாக்கிக் கொள்ளுகிறான். இந்த மருள் கொண்ட மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பிறரை ஒப்பு நோக்கும்போது கருத்தில் வேறுபாடுகளும், பிணக்குகளும் எழுகின்றன. தனது மனதைச் சீரமைத்துக் கொண்டு எவரை எக்கருத்தை தன்னோடு ஒப்பு நோக்கினாலும், ஒரு சமநிலை உணர்வு உண்டாகும். இந்த உணர்வில்தான் பேரின்பம் தொக்கி நிற்கின்றது. இப்பேருணர்வே “அருள் வெள்ளமாகும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * *
“மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே;
மனமதை உயர்த்தினால் மட்டில்லா இன்பமாம்,
மனத்திலே உள எல்லாம் மற்றெங்குத் தேடுவீர்.”
எண்ணிப்பார்:
“நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக்கொள்வீர்;
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபத்தில் அதுவே இலாபம்”.
“உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசினால்
உள்ளொளி தீயாகி உடலைக் கெடுத்திடும்”.
இருள் போக்கும் குண்டலினியோகம்:
“அருள் விளக்க மில்லாத குறையில் மக்கள்
அனைத்து நலனும் இழந்த துன்பம் ஏற்று
பொருள் காக்க, பூகாக்க, பொன்னைக்காக்கப்
போரிட்டு மடிகின்றார் அந்தோ ! வாழ்வில்
மருள் போக்கி மக்கள் ஒத்துதவி வாழ
மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்றுள்ளத்தில்
இருள் போக்கும் அகத்தவமும் அகத்தாய்வும் பின்
இனிதளிக்கும் குண்டலினி யோகம் கற்பீர்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : மே 08 : இனி சினம் இல்லை
PREV : மே 06 : மனம் வெளுக்கும் மருந்து