x

மே 03 : நால்வகை ஆற்றல் வரவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


“நால்வகை ஆற்றல் வரவு”

“வயிறானது எப்போழுதுமே நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இந்தப் பழக்கத்தினால் என்ன ஆகும் என்றால் உணவு கொஞ்சம் குறைந்துவிட்டாலும் ஏதோ இழந்து விட்டது மாதிரி இருக்கும். அதைப்போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கிற வரைக்கும் மனதுக்கு திருப்தி இருக்காது.

நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம் தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்து கொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து வரக் கூடிய அலைகளாக (Astronomical radiations) சேர்ந்து வர அவை துகள்களாகி அது ஒரு பகுதி, பூமியின் நடு மையத்திலிருந்து (Atomic fission) அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக்கூடிய அந்த துகள்கள் எல்லாம் பூமியினுடைய மேல்பக்கம் தான் நோக்கி வரும்.

அதிலேயிருந்து ஒரு பகுதி – ஆக நான்கு வகையிலே நம் உடலில் உள்ள சிற்றறைகள் (Cells) நமக்குத் தேவையான உயிர்ச் சக்தியை அவ்வப்போது தேவையான அளவுக்கு ஏற்றிக் கொள்ளும். இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான கனம் (density) உண்டு. அறிவுக்கும் உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும்.

உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன. சிலருக்கு கால்சியம் சத்து குறைவாகவுள்ளது. இரும்புச் சத்து குறைவாகவுள்ளது (Calcium deficiency, iron deficiency) என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும்.

அதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் அது சுத்தமாயும் நல்ல சத்துடையதாகவும் இருக்க வேண்டும். போஷாக்கு என்பது உணவின் அளவைப் பொருத்தல்ல. நீங்கள் ஜீரணம் செய்து பழகிய உணவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அடுத்த முறை உணவு எடுக்கும் போது ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் அளவு முறை. ஒரு மணி நேரம் தினந்தோறும் இரண்டு வேளையும் பசி இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவ காந்த சக்தியை இழுக்க முடியவில்லை என்றால் உடல் தானாகவே காற்றில் இருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். வயிற்றை மட்டும் நாம் நிரப்பிக் கொண்டிருந்தால் உலக விவகாரங்களில் உழைக்கிறது என்ற வரைக்கும் தான் வரும். அதற்கு மேலே சிந்தனை ஆற்றல் நமக்குப் பெருகுவது சிரமம். சிந்தனை ஆற்றலே மனிதனின் சிறப்பு. “

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

“உணவில் எளிமை, உழைப்பில் கடுமை

ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு”.

உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை,

நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.”


அணுவின் பெருமை:

“அணுவிலே பிரபஞ்சம்

அடக்கம் பெற்றிருப்பதனை

அறிவை யறிந்தோர் அறிவர்;

அவர் அணுவாய் நின்றதனால்”.

அணு :

“அணுவினது தத்துவத்தை யான் ஆராய்ந்தேன்

அண்டபிண்ட சராசரங்கள் அதன் கூட்டன்றோ?

அணுவினிலே சூடுண்டு குளிரும் உண்டு

அதனுள்ளே காந்தமென்ற உயிரும் உண்டு

அணுவினிலே இருளுண்டு ஒளியும் உண்டு

அசைவுண்டு எழுச்சி கவர்ச்சிகளு முண்டு

அணுவினிலே அண்டபிண்டம் அனைத்தும் உண்டு

ஆலமரம் அதன்வித்தில் உள்ளாற்போல”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மே 04 : அறுகுணச் சீரமைப்பு

PREV      :    மே 02 : கவலை ஏன்?

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!