x

மார்ச் 29 : பூரணப் பொருள்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

பூரணப் பொருள்கள் :

“பிரபஞ்சத்தில் காணும் எப்பொருளும் அனுக்களின் கூட்டமே, சக்தி என்றாலும் வேகம் என்றாலும் ஒன்றே. வேகம் என்பது பிறக்குமிடம் அணுவேயாகும்.அணுவில் ஒரு வேகம் இருக்கிறதென்றால் அது ஒரு குறை நிலையாக இருந்து, நிறைவான ஒன்றை நாடி எழுகிறது என்பது தான் பொருள்.

குறை என்பது நிறைவான ஒன்றை இணையவைத்தும் ஆதாரமாகவும் கொண்டு இருக்கும் மாறுபட்ட நிலை.ஆகவே அணு என்ற ஒரு குறை நிலைக்கு மூலமும் முடிவுமாக இருப்பது ஒரே பூரணப் பொருள் தான் என்று விளங்குகிறது.அணுவைக்கடந்து ஒரு பொருளோ, அணு நிலையைக் கடந்து ஒரு தனி நிலையோ உண்டு எனில், அது வெட்ட வெளியைத் தவிர வேறொன்றுமில்லை.

ஆகவே வெட்டவெளி என்ற தத்துவமே அனைத்திற்கும் ஆதாரமாகவும் மூல சக்தியாகவும் உள்ள சர்வ வல்லமையும் உடைய ஒரு உறுதிப் பொருள் என்றும் அதுவே ஆதியாகவும் அனாதியாகவும் உள்ள பூரணப் பொருள் எனவும் திடமாகக் கூறுகிறேன்.இயற்கையின் ஆதி நிலை என்றும், சிவம் என்றும், தெய்வம் என்றும் பேசப்படுகிறதும் இதுவே.

ஒரு மனிதனின் விந்து நாதத் தொடர்பை பின் நோக்கி ஆராய்ந்து கொண்டே போனால் அது பல்லாயிரம் ஜீவராசிகளைக் கடந்து கடைசியாக அணுவிலே தான் போய் முடிவுபெறும். அணுவின் மூலமோ, மேலே விளக்கிய வெட்ட வெளிதான் என்றும் தெரிந்து விடும். அங்கிருந்து முன் நோக்கிப் பார்த்தால் பிரபஞ்சமாக விரிந்துள்ள அனைத்துமே ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கும் உண்மை அறிவுக்கு அகக்காட்சியாகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“எல்லையற்றதை எல்லையுடையதாகப்

பார்ப்பது அறிவின் குறைபாடு”.

முற்றறிவில் நிறைந்திடுவோம் :

“என்னுடைய அறிவிற்கு ஆதிமூலம்’

இறைவனே எனும் உணர்வென் தவத்தால் பெற்றேன் ;

என்ன சொல்வேன் இவ்வுணர்வு உடலைக் கொண்டு

இயங்கிப் பெற்ற பதிவுகளை விழுங்குமாபோல்

மின்னொளியாய் அறிவு, உயிர், உடல், பாரண்டம்

மிக விரிந்த பேரண்டம் ஒன்றில் ஒன்றாய்ப்

பின்னிப்பின்னி நியதியோடு இயங்கி அந்தப்

பெருவெளியில் அனைத்துமாய் அறிவுமானேன்”.

அறிவின் முழுமைப்பேறு:

“தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்

தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்

தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று

தேர்ந்த சில சொற்களினால் விளக்கலாகும்;


தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்

திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட

தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்

திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர் சொல்வேன்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   மார்ச் 30 : நற்பண்பு காக்க

PREV      :  மார்ச் 28 : மெய்விளக்கம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!