x

மார்ச் 28 : மெய்விளக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

மெய்விளக்கம் :

விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று விட்டால் மாத்திரம் மனித வாழ்வு நிறைவு பெற்று விடாது. மெய்யறிவு இல்லாத விண்ணறிவும், புலனறிவும், தன்முனைப்பிலிருந்து மனிதனை விடுவித்து அறிவின் முழுமையையும் அமைதியையும் அளிக்க முடியாது. புலனறிவால் விரிந்து காணும் உலகம், சிந்தனையால் சுருங்கிக் காணுகிறது என்பது தெளிவு. இயற்கையின் முழுமுதல் நிலையான பேராதார நிலையையும், அதையும் ஐயமின்றி உணரக் கூடிய அறிவையும், உணர்ந்து கொள்ளும் அறிவின் முழுமைப் பேறுதான் மெய்யறிவாகும்.

புலன் அறிவால் பல கோடி தோற்றங்களாகக் காணும் உலகம் சிந்தனை அறிவு எனும் விஞ்ஞானத்தால் வெளி-விண்-அறிவு என்ற மூன்று பொருட்களுக்குள் சுருங்கி விடுகிறது.இவற்றில் வெளி, விண் எனும் இரண்டு பொருட்களுக்கிடையே உள்ள உறவும், இவ்விரண்டில் எது முந்தியது எது பிந்தியது என்ற விளக்கம் காணும் போது, விண் என்பது இருப்பு நிலையாகிய வெளியின் நுண்ணியக்கச் சுழலலையே என்று உணரும் போது வெளிவிண் இரண்டும் ஒன்றாகி விடுகிறது.

அகத்தவத்தின் மூலம் அறிவு ஒடுங்கி அந்த முழுமுதற் பொருளான இருப்பு நிலையறியும் பேறுகிட்டும் போது அகக்காட்சியில் அப்பேராதாரப் பரம் பொருளில் அறிவு அடங்கி உறைந்து ஒன்றுபட்டு அதன் தனித்தியங்கும் செயலொழிந்து இருப்பு நிலையாகி விடுகிறது. இந்த அனுபவமே மெய் விளக்கமாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது –

என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி”.

“அறிவு என்பது அறியப்படுவது.

ஞானம் என்பது உணரப்படுவது.”

“அறிவை ஏடுகளில் பெறலாம்.

ஞானத்தை தவத்தால் பெறலாம்.”

“ஆறாவது அறிவைக் கொண்ட

இந்த மனிதனின் வாழ்வின் நோக்கம்,

அறிவு முழுமை பெறவேண்டும் என்பதே.”

“அறிவு – உண்மை. மெய்ப்பொருள் நிலை”.

“அண்டத்தில் கடவுளாய் அழைக்கப் படுபவன்

பிண்டத்தில் உயிரெனப் பேசப் படுகிறான்

கண்டத்தின் மேலே கருவில் நிலைத்தவன்

அண்டத்தும் பிண்டத்தும் அவனையே காண்கின்றான்”.

பழிச்சுமை கழி:

“ஐயுணர்வின் வயம் ஏற்ற

ஆன்மாவின் பழிச் சுமையை

மெய்யுணர்வு பெற்றாற்றி

மிக எளிதில் கழித்திடலாம்.

தெய்வ நிலையுடன் அறிவைச்

சேர்த்தொன்றும் தவம் பயின்று

உய்ய நினைந்தால்; உலகீர் !

உடனே என் தொடர்பு கொள்வீர்! “

“பங்சமகா பாதகங்கள் செய்தோரேனும்

பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி

சஞ்லத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு

சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்

அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்

அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்

துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்

துணைபுரிதல் எம் கடமையாகக்கொண்டோம்.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

மகரிஷியின் நினைவு நாள்

குருவே சரணம்,,,

கடவுளுக்கு நாம்

தரவேண்டியது என்ன?

மகரிஷி விளக்கம்,,,

நம் வாழ்க்கையே கடவுளால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடவுள் என்னும் அரூபநிலையானது எங்கும் நிறைந்துள்ளது.

கடவுள் தன்மையோ அன்பு.

எனவே எங்கும் எதிலும் அன்பு என்னும் கடவுளின் தன்மை

ஊடுருவியுள்ளது.

நம்மிடமும்தான். எனவே எண்ணம், சொல், செயல் என்னும் நமது மூன்று

தொழில்களிலும் அன்பும், கருணையும் ஊடுருவி இருந்தால் போதும்.

இது தான் நாம் கடவுளுக்குச் செய்யக் கூடியது, தரவேண்டியது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 29 : பூரணப் பொருள்கள்

PREV      :  மார்ச் 27 : இறைவனின் நிழல்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!