x

மார்ச் 26 : ஆஸ்தீகமும் நாஸ்தீகமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

ஆஸ்தீகமும் நாஸ்தீகமும் :

இயற்கையமைப்பை அதன் ஆதிநிலையிலிருந்து அறிவின் எல்லை வரை அறிந்து கொள்வதே தத்துவ விளக்கம் எனப்படும். தத்துவ விளக்கம் பெற்றவன் இயற்கையே எல்லாமாகவும் தானுமாகவும் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்கின்றான். அவன் வேறு இயற்கை வேறு என்றில்லாத பேதமற்ற நிலையை உணர்ந்து கொண்டால் அவனுக்கு அப்பாலும் அவனுக்கு அந்நியமாகவும் ஏதுமில்லை என்று தெளிவடைகின்றான். இந்தத் தெளிவே ‘நாஸ்தீகம்’ எனப்படும்.

இந்த நிலையை ஆறறிவு பெற்ற மனித இனத்தில் வயது வந்தோர் எல்லோரும் அறிந்தால் அல்லாது மனித இன வாழ்வின் அமைதியும் இன்பமும் நிலைப்பதற்கில்லை. எனவே பல்வேறு அறிவு நிலைகளில் வாழும் உலக மக்கள் இயற்கையின் பூரணநிலையை அறிய வேண்டிய அவசியத்தையும் வழிகளையும் சொல்லுகிறான். அறிந்து கொள்ள முடியாத அறிவின் நிலையில் உள்ளவர்களுக்கு ஆசையும் அச்சமும் ஊட்டும் பல கற்பனைகளின் மூலம் அந்நிலையை நாட வழி செய்கின்றான். இவ்விதம் மக்கள் நம்பிக்கை மீது நல்வாழ்வு காண வகுக்கும் முறைகளே பக்திமார்க்கம் அல்லது ஆஸ்திகம் ஆகும்.

ஆகவே பூரண விளக்கம் பெற்றவனே நாஸ்தீகன். அவன் பரப்புவதே ஆஸ்திகம் ஆகும். நாஸ்திகம் என்பது உண்மையை உணர்ந்த நிலை. ஆஸ்திகம் என்பது உண்மையை உணர மனிதனை நம்பிக்கை மூலம் பக்குவப்படுத்தும் வழி. நாஸ்திகம் பரப்பக் கூடிதல்ல. உணரக்கூடியது. ஆசஸ்தீகமே பரப்பக் கூடியது. அதன் முடிவில் காயே பழமாவது போல் அதுவே நாஸ்தீகமாக மாறிவிடும். அறிவின் மயக்கத்தாலும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பேசப்படும் ஆஸ்தீகமும் நாஸ்தீகமும் பயனற்றது மட்டுமல்ல, பலவிதமான தீமைகளை விளைவிப்பனவாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“மனிதனே நீயார்? சொல்!

மனமென்பதெது ? கூறு!

மயங்கினாயேல் நீ மதிக்கும்

மற்றவெலாம் சரியாகா!”

ஞானம் தேடும் பக்தர்கள்:

“தேடுகின்ற பொருள் என்ன, ஏன் நமக்கு,

தெரிந்தவர் யார், கிடைக்குமிடம்எது, ஈதெல்லாம்

நாடுகின்ற வழக்கம் சிலபேரே கொள்வார்

ஞானமதைத் தேடும் சிலர் இதை மறந்து

ஓடுகின்றார் உருக்கமுடன் தேடுகின்றார்;

ஒடுங்கி நின்று அறியும் அதை விரிந்து காணார்

வாடுகின்றார்; உளம்நொந்து இருளைத்தேட

விளக்கெடுத்து போவதைப்போல முரண்பாடன்றோ”.

உண்மை நிலை:


“எல்லையற்ற பரவெளியாய்

எண்ணத்தை விரித்தகன்று

இந்நிலையில் நிற்க நிற்க

இல்லையென்று புலன் உணரும்

இருப்பு நிலையறி வெய்தும்

இது உண்மை உண்மை.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 27 : இறைவனின் நிழல்

PREV      :    மார்ச் 25 : மனவளக்கலை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!