x

மார்ச் 24 : கற்பனைகள் மலரும் விதம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
கற்பனைகள் மலரும் விதம் :
“ஒரு செயலை அல்லது அனுபோகத்தை அது நடவாத முன் ஞாபகத்தினால் உருவாக்கினால் அது கற்பனையே ஆகும்.புலனுணர்ச்சிகளிலே குறுகி நிற்கும் அறிவின் நிலையில் எழும் கற்பனைகளுக்கு, அந்த உடல் பலம், அந்த நிகழ்ச்சிக்குரிய சமய சந்தர்ப்பப் பலம் இவைகள் மாத்திரம் உதவியாக இருக்கும்.
விரிந்த அகண்டகார ஆராய்ச்சி எல்லையிலே எழும் கற்பனைகளுக்கு, இயற்கையில் அமைந்துள்ள எல்லாவகையான பலமும் நீண்டகாலமாக சமுதாயத்தைத் தொடர்ந்து வரும் உலக அனுபவங்களும், அக்கால மக்களின் அறிவின் பலமும் ஒன்று சேர்ந்து, அக்கால கற்பனைகளைச் செயல்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கிப் பின்னர் அவை செயலாக மலரும் படி செய்யும்.
புலனடக்கம்:
முதன் முதலாக சித்திரம் எழுதப் பழகுபவனுக்கு எண்ணத்தில் உள்ளபடி உருவம் அமைவதில்லை. பழகப் பழக எந்தவிதமாக எண்ணுகிறானோ அவ்விதமே அவன் எழுதும் உருவமும் அமைந்து விடுகிறது.
ஆராய்ச்சி முடிவுகளில் அறிவின் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு, இது போன்றே ஐம்புலன்களும் உடனே கட்டுப்பட்டு விடாது. பழகப் பழக எதை எண்ணுகிறானோ அதன்படி செயலாற்றும் திறமையும் வல்லமையும் ஏற்பட்டுவிடும்.
ஆகவே பொறுமையுடன் திட மனத்துடன் நீடித்துப் பழகி இலட்சிய எல்லையை அடைய வேண்டும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“கரு வளர வளர கருப்பையும் அகன்று தேவைக்கேற்ப
விரிவு அடைகிறது. இது போல அறிவு வளர வளர
அது செயல் புரிய ஏற்ற வாய்ப்பும் வசதிகளும்
பெருகிக் கொண்டே இருக்கும்”.
“அறிவும் புலன்களும் :
“அறிவைப் புலங்களில் அதிக நாள் பழக்கினேன்
அதன்பலன் உணர்ச்சிகள் அறிவை வென்றன,
அறிவையறிவால் ஆராயப் பழக்கினேன்
அந்தநிலையிலும் புலன்களை இயக்கினேன்;
அறிவு அகண்டாகாரத்தில் நிலை பெற
அதிகவிழிப்பும் வழக்கமும் பெற்றது,
அறிவு புலன்களை அறிந்தது, வென்றது
அங்கு வாருங்கள் அமைதி விரும்புவோர்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!