x

மார்ச் 19 : பொய்யும் மெய்யும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

பொய்யும் மெய்யும் :

‘மெய்’ என்றால் ஒன்றுபட்டது என்றும், ‘பொய்’ என்றால் இரண்டுபட்டது என்றும் பொருள்படும். பொய் என்றால் இல்லாதது என்று பலரால் கருதப்படுகிறது. இல்லாதது எப்படி இருக்க முடியும் ? அதை எப்படிச் சொல்ல முடியும்? இருப்பதைத்தான் கருதுகின்றோம், பேசுகின்றோம்.

ஒருவன் ஒரு பொருளை வைத்திருக்கிறான். ஆனால் கேட்பவர்களுக்கு அப்பொருள் இல்லை என்று சொல்லுகின்றான். இந்த இடத்தில் இல்லை என்று சொல்லுவதைப் பொய் என்று சொல்லுகின்றோம். அந்தப் பொருளை அவன் வைத்திருப்பது அவன் உள்ளத்தில் மறைந்து விடவில்லை, வேறு ஏதோ காரணத்தால் இல்லை என்று சொல்லுகின்றான்.

அவனுடைய உள்ளத்தில் அப்பொருள் இருப்பது, இல்லை என்று சொல்ல வேண்டுமென்பது ஆகிய இரண்டும் இருக்கின்றன. இருக்கிறது என்ற ஞாபகத்தோடு இல்லையென்று சொல்ல வேண்டிய ஞாபகமும் கூடி இரண்டுபட்டுவிட்டது. அதே பிளவுபட்ட கருத்து, சொல்லிலும் வந்தால் அதைப் பொய் என்று சொல்லுகின்றோம்.

இதே போன்று ஏக நிலையாக – அரூப நிலையாக இருந்த தெய்வநிலை, அணுவாகவும் பரிணாமமடைந்து விட்டபின், அது இரு நிலைப்பட்டு விட்டது. இவைகளில் பின்னர் தோன்றிய அணு முதல் அண்ட கோடிகளையும் அவைகளின் இயக்க நிகழ்ச்சிகளையும், வேதாந்திகள் பொய் என்று சொல்லுகின்றார்கள். அதாவது இரண்டு பட்ட நிலை என்று சொல்லுகிறார்கள்.

இப்படி இரண்டுபட்ட நிலைகளில், ஏக நிலையாக உள்ள அரூப நிலையை உணர்ந்து கொள்ளும் ஆற்றலை ஞானம் என்றும், அதை மறந்து இரண்டுபட்ட நிலையை மாத்திரம் கண்டு அறிவு மிரட்சி கொண்டு இயங்கி நிற்கும் நிலையை மாயை என்றும் கூறுகின்றார்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

இருளும் – ஈசனும் :

“மாசற்ற ஒளிஊடே, மறைந்திருக்கும் இருள்போல,

ஈசன் அறிவில் இருக்கும் நிலை”.

“கடவுள் = கட + உள், ஐம்புலன்களைக் கடந்து

உள்நோக்கி அறிவை அறிவது என்று பொருள்”.

பிரம்ம வித்தை:

“வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்

வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது,

அத்து விதமாகி அவன் எங்கு மாகி

அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்

சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை

சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்


தத்துவத்தின் முடிவான தானேயான

தனை யறிந்த வித்தை அது தர்க்கம் வேண்டாம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 20 : தவத்தின் பயன்கள் பத்து

PREV      :  மார்ச் 18 : அன்பும் கருணையும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!