x

மார்ச் 17 : பகைவனுக்கருள்வாய்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

பகைவனுக்கருள்வாய் :

“நமக்குத் தீங்கு செய்பவர்களிடம் சினம் கொள்ளாமல் இருக்க முடியமா என்ற கேள்வி எழுந்தது. ஒருவர் நமக்குத் தீங்கு செய்தால் உண்மையிலே அவர்மீது இறக்கம் கொண்டு அவரை நாம் வாழ்த்த வேண்டும். அவருக்கு எந்த முறையிலே நலம் செய்ய வேண்டுமோ அந்த வகையிலே நலம் செய்யத் தான் வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மனிதனிடத்தும் செயல் பதிவுகள் உள்ளடங்கியுள்ளன. என்றோ ஒரு காரியம் தவறாகச் செய்தாலும் அந்தத் தவறு பாவப் பதிவாகப் பதிந்து காலத்தால் அதற்குரிய துன்பத்தை ஒவ்வொருவரும் அடையத் தான் வேண்டும். இது இயற்கை நியதி.

அதற்கு இயற்கை வேறொருவரையும் நம்மையும் இணைத்து, நமக்கு அவர் மூலமாக வருத்தத்தைத் தருவதற்கு ஏற்ற செயல் விளையலாம். எனக்கு அந்த வருத்தம் வந்தது என்றால் அது அவருடைய தவறல்ல. ஏற்கெனவே என்னிடம் உள்ள பாவப்பதிவு வெளியாகும் சந்தர்ப்பம் வெளியாக வேண்டிய காலம் வந்தது; அந்தக் காலத்திற்கு அவரை இயற்கை கருவியாகக் கொண்டது. அது மாத்திரமின்றி, ஒன்றுமேயறியாத அவரை எனக்கு வருத்தம் ஏற்படச் செய்து நான் வருந்த அவர் பழியை ஏற்றுக் கொள்ளலாமா? இவ்வாறு இயற்கை ஒரு அப்பாவியை அதற்கு உபயோகிக்க முடியுமா என்றால் இயற்கையிலே எந்தத் தவறும் இருக்க முடியாது.

ஏற்கனவே அவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டுவர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும். அவ்வாறு அவை ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால் அதற்குரிய காலத்தில் அந்தத் தீமை செய்தே ஆகவேண்டும் எண்ணத்தை அழிக்கவில்லையென்றால். ஆகவே அவரது எண்ணம் செயலாக வேண்டும். இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலம் நமக்கு ஒரு வருத்தத்தைத் தந்தது. இதை உணரும் போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“நீங்கள் கற்க வேண்டிய எல்லாப் பாடங்களையும்

குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம் !.”

எல்லார்க்கும் உதவி செய்வோம் :

“தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி

தவறென்று பிறர் செயலைப் பிறரைக் குறைகூறும்

அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்,

அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது

சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி

சூட்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துய்ய

நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்

நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்.”

ஆராய்ச்சி:

“பாத்திரம் அளவைக் கண்டு பண்டத்தை அதனிலே வை

கோத்திரம் பார்த்தல் விட்டுக் குணத்தினை அறிதல் நன்றாம்;


ஆத்திரம் வரும்போதெல்லாம் ஆராய்ச்சி அதன் மேல் கொள்ளு

தோத்திரம் செய்யும்போது துதிப்பவன் நிலையைக் காணு.”

நல்லோர் உள்ளமும் பொறாமையால் கெடும் :-

“நல்ல உள்ளம் பண்பட்ட குடும்ப மேன்மை

நாடறிந்த புகழ் வாழ்க்கை அமைந்துள்ளோர்க்கும்

மெல்ல ஒருநபர் மீது பொறாமை வந்தால்

மிகுந்து அது உள்ளத்தை நச்சு ஆக்கி

செல்லரித்த புத்தகம் போல் சீர்மை கெட்டு

செயல் திறனைச் சிறக்கவிடா துண்மை கண்டோம்

வல்ல மனவளக்கலையைப் பயில்கின்றோரே

வாழ்த்துகின்றேன் வாழ்வீரே பொறாமைவிட்டு.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 18 : அன்பும் கருணையும்

PREV      :   மார்ச் 16 : ஐவகை அறிவுத்திறன்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!