x

மார்ச் 16 : ஐவகை அறிவுத்திறன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
ஐவகை அறிவுத்திறன்:
“பொதுவான அறிவுத் திறனை ஐவகையாகப் பிரிக்கலாம்: அவை :
(1) இயற்கை அறிவு (Instinct)
(2) நுண்மாண் நுழைபுலனறிவு (Perspicacity ).
(3) உள்ளுணர்வு அறிவு (Intuition).
(4) தேர்ந்த அறிவு (Knowledge).
(5) மெய்யறிவு (Wisdom)
என்பனவாகும்.
இவற்றில் இயற்கை அறிவு எல்லா உயிர்களுக்கும் பொது. இயற்கையின் வளமான இருப்புகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப தனது தேவைகளை முறைப்படுத்திக் கொள்ளும் சிறப்பாற்றலே ‘இயற்கை அறிவாகும்’.
விளைவைக் கணித்த விழிப்பில் முயற்சியோடும் சிந்தனையோடும் செயல்புரியும் பண்பாய் வருவதே ‘நுண்மாண் நுழைபுலனறிவாகும்’.
நுணுகிய சிறப்புள்ள, ஊடுருவிக் கூர்ந்துணரும் அறிவாற்றலே அது.
இந்த அறிவின் வளர்ச்சிப் போக்கில் இயற்கையறிவு மறைந்து நிற்கும். வளர்ச்சி பெற்று விழிப்பும் சிந்தனையும் கூடும்போது அறிவு பெறும் உயர் திறனே ‘உள்ளுணர்வு’ ஆகும்.
தனது அனுபவத்தாலும் பிறர் சொல் மூலமும் நூல் வாயிலாகவும் வளர்த்துக் கொள்ளும் அறிவே ‘தேர்ந்த அறிவாகும்’. இது அவரவர்களுக்கு அவ்வப்போது அமையும் சூழ்நிலைகளுக்கேற்ப வேறுபாடுகளையும் சிறப்பினையும் அடையும்.
அணு முதல் அண்டங்கள் வரையில், மெய்ப்பொருள் முதல் உயிர்கள் வரையில், இயற்கை முதல் எண்ணம் வரையில் ஒன்று கூட்டித் தொகுத்துணரும் பேரறிவே மெய்யறிவாகும்.
இதுவே அறிவின் முழுமைப்பேறாகும். முன்னர் விளக்கப்பட்ட நான்கு வகை அறிவும் இங்கு இணைந்து செயல்படும். முற்றும் உணர்ந்து தெளிந்த அறிவு உறுதி, அயரா விழிப்பு, விளங்கிய வழியில் பிறழாது செயல்புரியும் பண்பு, அனைத்துயிர்களின் வாழ்க்கை நல விழைவு, இவையெல்லாம் அடக்கமாகக் கொண்டதே மெய்யறிவாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“தெய்வீகப் பேராற்றல் ஒவ்வொரு ஜீவனிலும் –
அதன் அறிவாக உள்ளது”.
ஓர்மை நிலைப்பயிற்சி :
“நினைப்பும் மறப்பும் அற்று இருக்க
நீ பழகிக்கொள், புலன்கள்
அனைத்தும் அடிமையாம்
அமைதி கிட்டிடும் ஆங்கே;
ஒன்றையும் நினையாது
உன்னையும் மறவாது
நின்ற நிலையே அது,
நீயறி நினைவை நிறுத்தி.”
“இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை என்றால்
அது தான் அமைதி”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!