x

மார்ச் 08 : எண்ணம், சொல், செயல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


எண்ணம், சொல், செயல் :

மனிதனிடம், மனமாக, பார்வையாக, சொல்லாக அல்லது எண்ணமாக வெளியேறும் அலை எந்தவகையாக இருப்பினும், அவ்வலை அவனுடைய தன்மைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கின்றது. ஒவ்வொரு மனிதனும் முன் அனுபவத்தினால் ஏற்பட்ட பதிவுகள் மூலம் செயல்படுவதினால் அவனுடைய எண்ணம், சொல், செயல், அனைத்தும் அவனுடைய பதிவின் அடிப்படையில் அமைந்திருக்கும். அவனுடைய தன்மைகள் யாவும் அலை மூலமாக வெளிப்படுகின்றது.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நல்ல பதிவுகளையும், தீயபதிவுகளையும் பெற்றிருக்கின்றான். ஆகவே மனதின் நிலைக்கேற்ப அவனிடமிருந்து வரும் எண்ணம் சில நேரங்களில் நேர்மையானதாகவும், சில நேரங்களில் முரண்பாடுடையதாகவும் இருக்கின்றன. இங்கு நேர்மையான அல்லது முரண்பாடான எண்ணம் அது சென்று அடையக்கூடிய பொருள் அல்லது மனிதனைப் பொறுத்து அமைவது இல்லை.

அவை யாரிடமிருந்து செல்கின்றனவோ அவர்களுடைய தன்மையைப் பொருத்து அமைகின்றன. இந்த விஞ்ஞானத்தை, தத்துவத்தை அறிந்து கொள்ளாமல் நாம் எண்ணற்ற பதிவுகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நன்றாக வேரூன்றச் செய்து கொண்டோம். தேவையற்ற தீய பதிவுகளை நாம் ஊக்குவிக்கும் பொழுது அது மேலும் ஆழமாகப் பதிந்து நம் குணங்களை தீய பதிவுகளே கட்டுப்படுத்துகின்றன.

நேர்மையற்ற முரண்பாடான எண்ணங்களை மாற்றி தீயபதிவுகளை களைவது சிறந்த ஆன்மீக முயற்சியாகும். தூய எண்ணம், சொல், செயல்களினால் இனிமையான நல்ல அலைகள் ஏற்படுத்தும் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஒருவரை வாழ்த்துவதினால் ஏற்படும் நற்பயனை நாம் இங்கு தான் உணரமுடியும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“பிறர் நலமாக வாழ வேண்டும் என்ற கருத்தோடு

எழும் ஒரு ஒலியே வாழ்த்து என்ற வார்த்தையாகும்”.

“உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்,

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்”.

“மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை; தொடர்ந்து

வந்து கொண்டேயிருக்கக் கூடிய ஒரு இயக்கம்”.

“இன்பத்தும் துன்பத்தும், இயற்கையும் கற்பனையும்,

சிந்தித்து அறிபவன், சிறப்பாக வாழ்வான்”.

“வேதத்தை யான்படித்த தில்லை ஆனால்

வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்,

வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை

வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்;

பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்


பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்

சோதிப்போர் புலனறிவால் என்னைக் காணார்

சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 09 : உணர்வு, உறவு

PREV      :  மார்ச் 07 : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!