x

மார்ச் 07 : உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் :

“ஒரு தீய எண்ணத்தை ஒரு முறை உள்ளே விட்டுவிட்டால் போதும், மறுபடியும் உதிக்காமல் செய்வது அத்தனை எளிதன்று.
விருந்தாளி – வேண்டாத விருந்தாளியேயாயினும் – முகத்தைச் சுளித்தால் போய்விடுவார். எண்ணத்தை விரட்ட விரட்டத் தான் மீண்டும் மீண்டும் வரும். விரட்டும் போது நீங்கள் அந்த எண்ணத்தோடு தான் உறவு கொண்டவாறே இருக்கிறீர்கள் என்பதே இதற்குக் காரணம்.

அதுமட்டும் அன்று, வெறும் எண்ணம் மட்டுந்தானே, நான் என்ன செயலிலா இறங்குகிறேன்? என்று ஒரு தீய எண்ணத்திற்கு இடங் கொடுத்துவிடக்கூடாது. விளைவஞ்சி, அந்த எண்ணத்தின் வழி நீங்கள் செயலில் இறங்காமல் இருந்துவிடலாம். ஆனால் எழுந்த எண்ணம் சும்மா போய்விடாது. ஒத்த தரம் உடைய இன்னொருவர் மனத்தில் நுழைந்து அது தனக்குச் செயலுருவம் கொடுத்துக் கொண்டுவிடும். அத்தகு ஆற்றல் பெற்றது எண்ணம்.

இன்னொன்று, செயலில் இறங்கமாட்டேன் என்று நிதானத்துடன் ஒரு தீய எண்ணத்திற்குநீங்கள் இடம் கொடுத்தீர்களானாலும் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் தோன்றிச் செயலாக உருப்பெற உங்களிடத்திலயே வேட்பையும், உந்துதலையும் தோன்றச் செய்து, செயலாக மாற்றம் பெற முனையும்.

இதனாலெல்லாம் தான், “உள்ளத்தால் உள்ளலும் தீதே, பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றும், “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்றும் சொல்லியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

எண்ணம்:

“எண்ணமே ஒரு நாடக மன்றம் போல்.

எண்ணமே அதில் எண்ணற்ற நடிகர்கள்,

எண்ணமே அதைப் பார்ப்போர், ரசிப்போராம்.

எண்ணமே அதன் நிர்வாகி, உடையவன்”.

“எண்ணம் சொல் செயலால்

எவருக்கும் எப்போதும்

நன்மையே விளைவிக்க

நாட்டமா யிரு”.

“இயற்கையை அறிந்துஒத்து

எண்ணுபவர் எண்ணம்

எப்போதும் எவ்விடத்தும்

கவலையாய் மாறாது”.

எண்ணம் நற்பயனாக :

“எண்ணத்தை எண்ணத்தால் எண்ணி எண்ணி

எண்ணத்தின் இருப்பிடமும் இயல்பும் கண்டு

எண்ணத்தை எண்ணத்தில் நிலைக்கச் செய்தால்

எண்ணமே பழக்கத்தால் தெளிந்து போகும்;

எண்ணமது எழும்போதே இது ஏன் என்று

எண்ணத்தால் ஆராய்ந்தால், சுலப மாக

எண்ணத்தின் காரணமும் விளைவும் காணும்

எழும்எண்ணம் யாவும் நற்பயனாய் மாறும்.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மார்ச் 08 : எண்ணம், சொல், செயல்

PREV      :  மார்ச் 06 : ஊனுடலே வாகனம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!