x

மார்ச் 05 : ஆசை நிறைவேறும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


ஆசை நிறைவேறும் :

ஆசை எழும்போது, அதாவது ஏதோ ஒரு பொருளை நாம் விரும்பும் போது அறிவிலே விழிப்போடு இருக்க வேண்டும். தவறினால் பல தீய விளைவுகள் உண்டாகும். வாழ்க்கையில் எளிதில் தீர்க்க முடியாத பல சிக்கல்கள் தோன்றிவிடும். ஒரு பொருள் மீது ஆசை எழும்போது அதனோடு உறவு கொண்டு கண்ட முன் அனுபவம், தற்காலச் சூழ்நிலை, எதிர்கால விளைவு இம்மூன்றையும் ஒன்றிணைத்து நோக்க வேண்டும்.

அப்போது தான் அறிவு தனது நிலை பிறழாது, மயக்கமுறாது. நலம் என உணர்ந்தால் அளவோடு முறையோடு அப்பொருளை பெறவும், துய்க்கவும் முயலவேண்டும். அறிவில் விழிப்போடு இருக்கும் வரையில் மாணா மனநிலை என்பது ஏது?

ஒருவருக்குப் பல பொருட்கள் மீது விருப்பம் எழலாம். அவற்றை வரிசையாகக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட ஒரு பொருளின் தேவை இன்றியமையாததா, அதனை அடையத் தனது ஆற்றலும் சூழ்நிலைகளும் ஒத்து இருக்கின்றனவா, கணிக்கும் அல்லது எதிர்பார்க்கும் விளைவுகள் என்ன, இவற்றைக் கொண்டு சிந்தனை செய்யுங்கள். தேவையும், ஆற்றலும், சூழ்நிலையும், விளைவாகக் காணும் நலனும் ஒத்திருந்தால் அதனை அடைய முறையான முயற்சியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

செயலாற்றி வெற்றி பெறுங்கள். இல்லையெனில் “இன்னின்ன நிலைமைகளால் இந்தப் பொருள் மீது ஆசைக் கொள்ளுதல் தவறு, எனவே இந்த ஆசையை நான் நீக்கிக் கொள்கிறேன்” என்று பலதடவை காலை மாலை அதற்கென உட்கார்ந்து தானே மனதிற்குள் உறுதி கூறிக்கொள்ள வேண்டும்.

சில குறிப்பிட்ட பொருட்களைப் பற்றி இவ்வாறு முடிவு செய்து கொண்டால் மீண்டும் பிற பொருள் மீது முறையற்ற அவா எழாது. நலம் தரும் பொருட்களைப் பெறத் தேவையான ஆற்றலும் நன்கு வளர்ச்சி பெறும். அடுத்தடுத்து வாழ்வில் வெற்றிகள் பல கிட்டும். வாழ்வில் முழு அமைதியும் பெறலாம். இவ்வழியில் ஆசையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,

அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு”.

“சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,

பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”

அகத்தவப் பயன்கள் :

“அறிவதனைக் கருவினிலே இணைத்து தவம் ஆற்ற

ஐம்புலன்கள் அமைதி பெறும் ஆறுகுணமும் சீராம்

அறிவுதன் விழிப்புநிலை பிறழாத தெளிவில்

ஐந்து பெரும் பழிச் செயல்கள் விளைய வழியேது?


அறிவு உயிரில் அடங்கி அந்நிலையில் மேலும்

ஆழ்ந்து ஒடுங்கித் துரியம் நிற்க முன்வினைகள் போகுமே;

அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க

ஆதியாம் மெய்ப்பொருளாம், அறும் பிறவித் தொடரே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 06 : ஊனுடலே வாகனம்

PREV      :   மார்ச் 04 : மனதின் பத்துப் படிகள்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!