x

மார்ச் 04 : மனதின் பத்துப் படிகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனதின் பத்துப் படிகள் :

“உடலை இயக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர் குலையாமல் தடைவரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும். தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்கப் பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும்.

அப்போது தேவை உருவாகிறது. உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான். தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய முயற்சி தோன்றுகிறது. முயற்சியின் காரணமாக செயல் மலர்கிறது. செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின் படி விளைவு தருகிறது. விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது.

அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும். அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது. உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில் இன்னவிதமான உணர்ச்சி தோன்றியதானால் இன்னவிதமாகச் செயல்பட வேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது.

இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது. எனவே உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல்விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்து கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.

எனவே உயிரினது படர்க்கை நிலை ஆற்றல் தான் மனம். ஆங்கிலத்தில் (Psychic extension of the life energy is mind) எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனத்தையே அறிவு என்கிறோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்

அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே.”

“ஒருவர் பெற்ற ஞானத்தைப்

பரிசோதிக்கக் கருவி ஒன்று இருக்குமேயானால்

அது அவரது குடும்பத்தின் அமைதி தான்.”

“நீங்கள் கற்க வேண்டிய எல்லாப் பாடங்களையும்

குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம்.”

“முற்கால வாழ்க்கையில் கண்ட அனுபவம்,

இக்காலத்தேவை நிகழ்ச்சிகள், சூழ்நிலை,

பிற்கால விளைவுகளை யூகித்துக் கடமைசெய்,

முக்காலம் கண்டமுனிவன் நீயே அங்கே.”

பிரம்மம் :

“நான் என்ற பிரம்மத்தை அறிந்தேன் அஃது

நினைவதனின் முடிவாகும், மூலமாகும்

சூனியமே! தோற்றமெலாம் அதிலிருந்தே!


சுத்த வெளி! மௌனமது! உவமை இல்லை!

ஊன் உருவில் ஓடும் உயிர்ச்சுழற்சி வேகம்

உற்பத்தி செய்கின்ற மின் சாரத்தில்

தோன்றுகின்ற அலை இயக்கம் அறிவு ஆகும்.

சுயநிலையில் தியானித்து அறிதல் வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மார்ச் 05 : ஆசை நிறைவேறும்

PREV      :   மார்ச் 03 : சாதனை வழி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!