x

பிப்ரவரி 24 : குடும்பம் அமைதி பெற

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


குடும்பம் அமைதி பெற :

“இணக்கத்தை வற்புறுத்தும்போதும், பிணக்கத்தை தீர்க்கும் போதும் இன்சொல்லையே உள்ளமும் உதடும் உபயோகப்படுத்த வேண்டும். இன்சொல்லினால் கெடுதல் ஒழிய நன்மைகள் பல பெறலாம்.
குடும்ப அமைதியைப் பெற, சலனமில்லாததும், விசாலமானதுமான மனம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் என்பார்களே அது இங்கே தான் வேண்டும்.

பொறுமை, சகிப்புத்தன்மை இவை எல்லையின்றித் தேவையாகும். எவ்வளவு பெரிய குழப்பமானாலும் பொறுமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு விடலாம்.பிறர் குற்றத்தை பெரிதுபடுத்தாமையும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும். அதேபோல் பிறர் கூறும் கடுஞ் சொற்களையும் – அவை சொல்லப்படாதது போல் பாவித்து ஒதுக்கிவிட வேண்டும். அப்போது தான் அமைதி பிழைக்கும்.

தற்போது அம்மா – மகளுக்கிடையே கூடப் பிணக்குகள் தோன்றுவதையும், வளர்வதையும் பார்க்கிறோம். அவர்களுக்கிடையே கூட, விட்டுக் கொடுத்தல் (Adjustment) இல்லையானால் வேறு யாரிடம் அதைத் தேடுவது? அம்மாவுக்குப் பெண்ணாக இருக்கும் போதே இப்படி என்றால் பின்னால் வாழ்க்கை எப்படி அமையும்?. அப்புறம் யார்மேல் குற்றம் சொல்வது?.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக்கொள்ளவில்லை யென்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் – ஞானமேயானாலும் – சிறிது காலத்திற்கு – அவர்கள் ஒத்துக் கொள்ளும் வரை – தள்ளி வைக்க வேண்டியது தான். குடும்ப அமைதியை இழந்து பெறுவது – ஞானமேயாயினும் – அதனால் ஒரு பயனும் வராது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“வாழ்க்கை என்பதே சிக்கல் நிறைந்த மனப் போராட்டமாகும்.

உடலும் உயிரும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே”.

“தவறு செய்யப்பட்ட கையேடு புத்தி சொல்லக்கூடாது.

குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது”.

“தன்னையும் கெடுத்து பிறரையும் கெடுத்து

தற்காலத்திலும் துன்பம் உண்டாக்கி பின்னரும்

துன்பத்தை நீடிக்கச் செய்யும் ஒரு –

உணர்ச்சி வயப்பட்ட பகை உணர்வு சினம் ஆகும்”

தற்சோதனையும் (Introspection),

தவமும் (Simplified Kundalini Yoga – SKY) :

அருள் வெளிச்சம்:

“விழிப்பு நிலை யென்ற அருள் வெளிச்சம் கொண்டு,

விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலை மனத்தின்

அழுக்கற, தற்சோதனையில் முனைந்திடுங்கள்:

அன்பூற்றால், கடமையுணர் வாகும் வாழ்வு;


பழுத்து விடும் அறிவு, அந்தப் பக்குவத்தால்,

பரத்தோடு உயிர் ஒன்றும் துரியாதீத

முழுத்தவமோ பிறப்பு இறப்புச் சக்கரத்தை

முறித்து விடும். மெய்விளங்கி முழுமையாவீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 25 : ஞானம் – பக்தி – மாயை – முக்தி

PREV      :   பிப்ரவரி 23 : பூஜ்யமும் பூஜ்யரும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!