x

பிப்ரவரி 23 : பூஜ்யமும் பூஜ்யரும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


பூஜ்யமும் பூஜ்யரும் :

பூஜ்யம். முழு எண் ஒன்று இருக்குமானால் அது பூஜ்யம் ஒன்று தான். ஏன் என்றால் மற்ற எண்ணெல்லாம் ஒரு பக்கம் ஆரம்பிக்கும். ஒரு பக்கம் முடியும். உருவம் கோணல் மாணலாக இருக்கும். ‘1’ என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், அதற்கு மேல் முனை, கீழ்முனை என்று இரண்டு இருக்கின்றன.

‘2’ என்ற எண்ணை எடுத்துக் கொண்டீர்களானால், முன் முனை இருக்கிறது. பின் முனை இருக்கிறது. மற்ற எண்கள் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் வளைகின்றன.

3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள். ‘ 0 ‘ அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.
பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம்.

ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10. பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது.

பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].
அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன்.

யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள். இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள

எடுக்கின்ற முயற்சிக்கு இந்த உடல்

தேவைப்படுகிறது”.

“உணர்ந்தால் தெளிவு,

உணராவிட்டால் மயக்கம்”.

“நின்றிடு அகண்டாகாரம் நிலையினில்

வென்றிடுவாய் புலன் ஐந்தையும்; வெற்றியே!”

சூனியமே உறுதிப் பொருள் :

“சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்

சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று

சூனியமே கோடானு கோடியண்ட

சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்’

சூனியமே வலிமிக்க உறுதியாய் நின்று

சொரூப கோடிகளை ஈர்த்தியக்கு தன்றோ?

சூனியத்தை அணு நிலையைக் கொண்டா ராய்ந்தே

சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்.”

ஒன்றே பலவும்:

“ஒன்றுமில்லா ஒன்று இருள், பூர்ணம், மௌனம்


உள்ளுணர்ந்து ஒடுங்கி நிற்கும் நிலையைப் போன்று

ஒன்றுமில்லா ஒன்றுக்கு ஆதியில்லை

ஒலி, வெளிச்சம், இயக்கம் அணு அதன் பூரிப்பு

ஒன்றுமில்லா ஒன்று இந்த நாலானாலும்

ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தாகும்

ஒன்றுமில்லா ஒன்றின் இரகசியத்தைக் கண்டால்

உண்டுஎன்பது இல்லை என்பது இரண்டும் ஒக்கும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 24 : குடும்பம் அமைதி பெற

PREV      :  பிப்ரவரி 22 : முழுமைப் பேறு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!