வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
ஆண்டவன் கணக்கு :
ஆண்டவனைக் கேட்டு இனிமேல் எதுவும் வாங்கிட முடியும் என்று நீங்கள் கணக்குப் போட்டால் அவன் ஏமாந்தவன் அல்ல. நீங்கள் செய்து விட்டு கணக்குப் பார்த்து, எனக்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கூட கணக்கு சரியாக வராது. முன்பு, பின்பு செய்திருந்தால் கூட செயல் பாக்கி இருந்தால் பிடித்துக் கொள்வான்.
அவனிடம் ஒரு நியதி இருக்கிறது. நீங்கள் என்ன செய்தீர்களோ அந்தச் செயலின் விளைவாக, நல்லதையோ, கெட்டதையோ உங்கள் நோக்கத்திற்கு தக்கவாறு, செய்யும் திறனுக்குத் தக்கவாறு, அவன் செயல் விளைவாக தருவான்.நீங்கள் நல்ல நோக்கத்தோடு நல்ல முறையில் செய்தால், செய்த செயலின் விளைவு எல்லாம் நல்ல விளைவாகவே இருக்கும்.
அது தான் அவன் கொடுக்கக் கூடிய வரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில், நல்ல செயலையே செய்தோமானால் எல்லாமே நலம் விளையும் என்கின்ற பொழுது சமுதாயத்திற்கு நலம் தர வேண்டும் என்பது ஒன்று ஆயிற்று; கடமை செய்கின்றோம் என்பது ஒன்று ஆயிற்று. இரண்டாவதாக நல்லதையே ஒவ்வொரு செயலிலும் செய்து கொண்டே வந்தால் இறைவனுடைய ஆற்றலை நாம் காணக்கூடிய அளவுக்கு ஒரு விழிப்பு நிலை வந்துவிடுகிறது.
பிறகு நாம் இறைவனைத் தேடிக் கொண்டோ அல்லது போற்றிக் கொண்டோ இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு இயக்கத்திலும் அவனுடைய இருப்பைக் கண்டுகொள்ளலாம். ஆக இறைவனை உணர்ந்து கொள்வது என்பது சமுதாயத்திற்கு நலம் தருவதாகும்.
இந்த இரண்டும் தான் எல்லா மதங்களுடைய அடிப்படையான நோக்கம். இந்த அடிப்படையான நோக்கம் வெற்றிபெற வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்ல செயலை செய்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்; அதன்பிறகு செய்து பலன் காண வேண்டும். மற்றவர்களுக்கும் அதைப் பரப்ப வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“காரணம் அறியாமல் காரியம் செய்பவன் ‘பக்தன்’,
காரணம் என்னவென காணமுயற்சிப்போன் ‘யோகி’,
காரணம் கூறமுடியா எல்லை கண்டவன் ‘முக்தன்’,
காரணம் விளைவுகள் கண்டு செயலாற்றுவான் ‘ஞானி’ “.
நல்லோர்க்கும் துன்பம் வரும்:-
‘உண்மையோடும் நேர்மையோடும்
உள்ளோர்க்குத் துன்பங்கள்
உண்டாகா’ எனும் கருத்து
ஒருமயக்கக் கற்பனையே.
உண்மை ஒளியாய் வாழ்ந்த
உலக அறிஞர் பலர்க்கு
உண்டான தொல்லைகளை
யூகித்து உணர்ந்திடுவீர்.
உயிரை உணர்தல்:
“தெய்வ நிலையறிந்தோர்கள் கோடி என்றால்,
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்;
தெய்வ நிலையதனை வெளி பிரம்மம் என்று
தேர்ந்த சில வார்த்தைகளால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட
தெய்வர்களல்லால் மற்றோர் உயிரைப் பற்றி
திருத்தமுடன் உரைப்போர் யார்? வாரீர் சொல்வேன்!”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.