வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
இருதய மலர்களுக்கு:
உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞ்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளிய முறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனித குலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது.
அருட் பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்சம]மாக விளங்குகிறது. இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் [Repulsive Force] ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் [Attractive Force] ஆற்றலும் ஒன்றிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தக்களமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.
இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு [Pattern, Precision & Regularity] எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும், முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால் தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும்.
பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வையடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, “உடல் உள்ளப்” பயிற்சி முறையே எளிய முறை “குண்டலினி யோகமாகும்”.
இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமும் ஆகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன் பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள்.
உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்கு படுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.
அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும்,
அந்நோக்கத்திற்கேற்ப வாழும் முறை என்ன
என்பதை அறிந்து கொள்வதும் தான் ஞானம்”.
“மனம் இல்லாது மனிதனே இல்லை”
அறிவறியும் தவம்:
“இரு விழிகள் மூக்கு முனை குறிப்பாய்நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது,
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந் நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்.
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்கமாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 10 : பிறவித் தொடர்பு
PREV : பிப்ரவரி 08 : அருள்தொண்டு