x

பிப்ரவரி 08 : அருள்தொண்டு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


அருள்தொண்டு:

எனது பரு உடல் இயங்கிக்கொண்டிருந்த போதிலும், அதிலிருந்து எழுந்து விரிந்து இயங்கிக்கொண்டிருக்கும் அறிவு, உலக முழுவதும் அன்பு ஊற்றாக நிறைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட வேலைகளில் பேரியக்க மண்டல முழுவதும் நிறைந்து பேரமைதியில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

விரிவால் அமைதி துய்க்கும் அறிவு அவ்வறிவு தன் விழிப்பு நிலைபெற்று தனது பற்றரிவு, கற்றறிவு, முற்றறிவு எனும் தனது மூன்றடுக்கு இயக்க நிலைகளையும் உணர்ந்து கொண்டபின் அதே அறிவு ஏதோ ஒரு பொருள் வரையில் அல்லது உயிர்கள் வரையில் எல்லை கட்டி இயங்கும்போது தான் இரக்கம், அன்பு, ஒழுக்கம், கடமை, தியாகம், இவையெல்லாம் பிறக்கின்றன.

இதே அறிவு விரிவு பெற்று அமைதி காணாமுன்னம் உயிர்களிடத்தும் பொருட்களிடத்தும் எல்லைகட்டிய போது ஆறுகுணங்களாகவும், துன்பம் விளைக்கும் பாவச் செயல்களாகவும் உருவெடுத்தன. இவ்வாறு நீண்ட கால அறிவின் தொடரியக்க சரித்திரம் முழுவதும் நினைந்து நினைந்து வாழ்வில், செயல்களில், பொறுப்புணர்ச்சி பெருகிக் கொண்டிருக்கின்றது.

அறிவின் விளக்க ஒளியோடும் அனுபவங்களின் சிறப்பான பொறுப்புணர்வோடும் உங்களில் ஊடுருவி நிறைந்து உங்களில் ஊறிவரும் அன்பின் வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். இத்தகைய உயிர்த் தொடர்பால் அறிவின் ஒருமைப் பேற்றால் எனது அருள் தொண்டில் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“அறியாமை அழிவுக்குத் துணை போகும்,

ஞானம் ஆக்கத்திற்கு அச்சாணியாக இருக்கும்”.

“அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்;

ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்”

அகத்தவப் பயன்:

“இறைநிலைக்கும் மனநிலைக்கும் இடையிலுள்ள உயிரை

எளிதாக உணர்ந்திடலாம் அகத்தவத்தின் மூலம்

மறைவிளக்கும் உண்மைகளை மனத்தினுள் உணர்வாய்

மற்றவர்கள் காட்டுவதற்கு வெளியில் ஒன்றும் இல்லை;

பொறையுடைமை, விழிப்புநிலை, அஞ்சாமை, தியாகம்

புலனுணர்வு இன்பத்தில் அளவு முறை வேண்டும்.

நிறைவுபெற முடிவு எடுத்து வழுவாது ஆற்றி


நேர்மையுடன் வாழ உன்னில் அவன் – அவனில் நீயே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 09 : இருதய மலர்களுக்கு

PREV      :  பிப்ரவரி 07 : குடும்பக்கலை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!