வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
என் வீடு :
மெய் விளக்கம் என்பது மனிதனுக்கு ஒரு முழுமையான மன மாற்றம் [Transcendental state of Consciousness ] ஆகும். மெய்ப்பொருளைப் பற்றி இன்னது என விளங்கிக் கொண்டால் மட்டுமே போதாது; “நான் பிரம்மம், நானே பிரம்மம்,” என்று பிறர் காதுக்கு எட்டுமாறு கூறிக்கொண்டே இருப்பதும், இவ்வாக்கியங்களையே மந்திரமாக செபித்துக் கொண்டிருப்பதோ மட்டும் போதாது. அந்த விளக்கத்தில் தோய்வு பெற்று வாழ்வில் அறநெறி ஒழுகி மெய்ப்பொருளே தானாக இருக்கும் பேரறிவில் நிலைத்து மனமாற்றம் பெற்று நிற்க வேண்டும்.
உதாரணம் : ஒரு பெண் திருமணம் ஆகும் வரையில் தந்தையார் குடும்பத்தவளாகவே தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறாள். அவள் திருமணம் செய்து கொண்டு கணவன் வீடு சென்று அக்குடும்பப் பொறுப்பில் தோய்ந்த பின் கணவன் குடும்பத்தவளாகவே அறிவிலும் பொறுப்பிலும் மாற்றமடைகிறாள்.
“மாமியார் வீடு” என முன்னர் அவள் கருதியது “என் வீடு” என்றாகிறது; “என் வீடு” என முன்னர் இருந்தது “தாயார் வீடு” என்றாகிவிட்டது! அதுபோல தவத்தில் மெய்ப்பொருளோடு ஒன்றிக் கலந்து நிலைத்து நிலைத்துப் பழகி அதுவே தானுமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும்போது ஒரு உயர்ந்த நிலைக்கு மனமாற்றம் உண்டாகின்றது.
வேதாந்தங்களைப் படித்ததாலோ மற்றவர்கள் விளக்கக் கேட்டுப் புரிந்து கொண்டதாலோ மாத்திரம் இத்தகைய முழு மனமாற்றம் உண்டாவது அரிது. தன்முனைப்பை அடியோடு ஒழித்துப் பேராதாரப் பேரறிவோடு கலந்து உறைவதற்குப் பயிற்சியால் தான் இயலும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“இயற்கையின் சிறப்பே எண்ணமாகும்.
தெளிந்து திறன் பெற்ற எண்ணத்திற்கு –
இயற்கை ஒத்துழைக்கின்றது; கட்டுப்படுகின்றது”.
மனிதனும் தெய்வமே :
“மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே
மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்;
மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயையாம்
மனம் உயர் வெளியினில் மருவித் தோய்ந்திட,
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே.”
“இறைநிலையே அறிவாக இருக்கும்போது
இவ்வறிவை சிலைவடிவத் தெல்லை கட்டி
குறைபோக்கப் பொருள், புகழ், செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர்வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேட
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 07 : குடும்பக்கலை
PREV : பிப்ரவரி 05 : முயற்சி – பயிற்சி