x

பிப்ரவரி 04 : மெய்விளக்கக் கல்வி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

மெய்விளக்கக் கல்வி :

மனித குலத்தில் காலத்தால் இடத்தால் அவ்வப்போது ஏற்பட்ட தேவையுணர்வால், ஏற்பட்ட செயல்களும் கருத்துகளும் பல ஆயிரமாயிரம் தலைமுறைகளாக, சிந்தித்துத் திருத்தம் பெறாத காரணத்தால் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

விஞ்ஞான அறிவால், விரைவு வாகன வசதிகளால், துரிதமான செய்தி போக்குவரத்து சாதனங்களால், உலக மக்களுடைய பொருளாதாரம் அரசியல் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஊடுருவி இணைந்து கொண்டு வருகிறது.

இக்காலத்திற்கு ஏற்ப தேவையற்ற பழக்கப் பதிவுகளை வாழ்வில் புகுத்தி மனித குலம் பிணக்கொழித்து அமைதியில் வாழ வேண்டும். இம்மாற்றம் வெற்றியாக மனித குலச் சீரழிவு இன்றி அமலுக்கு வரவேண்டுமெனில் மெய்விளக்கக் கல்வி அனைத்து நாடுகளிலும் பள்ளி மாணவ வயதிலிருந்தே அறிந்து கொள்ள ஏற்றபடி பாடத்திட்டங்களில் பரவ வேண்டும்.

இப்பெரிய மாற்றம் சமுதாய சீர்திருத்தமாக பிணக்கின்றி, போரின்றி நடைபெற சில விஞ்ஞானிகள், கல்வித்துறையினர், ஆன்மீக அறிஞர்கள் இன்று ஒன்று கூடி பொறுப்பேற்க வேண்டும்.

போருக்காகவும் போரச்சத்தோடும் செலவிடும் பொருள், மனித முயற்சி இவற்றில், நூற்றில் ஒரு பங்கு செலவிட்டாலே சில ஆண்டு காலத்திற்குள் அமைதியான முறையில் சமுதாயச் சீர்திருத்தமும் உலக அமைதியும் காணலாம்.

எல்லாவிதமான கல்விகளையும் முழுப்பயன் விளைக்கச் செய்யும் இம்மெய் விளக்கக் கல்விக்கு வித்திடுவதே உலக சமுதாய சேவா சங்கமும், அதன் பயிற்சி முறையான மனவளக் கலையுமாகும். இவற்றின் மதிப்புணர்ந்து நமது கடமைகளை ஆற்றி மன நிறைவு பெறுவோம்.

நம்மை உருவாக்கி வளர்த்து வாழவைக்கும் இயற்கைக்கும், பொருள், கல்வி, பாதுகாப்பு, தொண்டு இவற்றால் நமது வாழ்வுக்குச் சிறப்பளிக்கும் மனித சமுதாயத்திற்கும் நாம் ஆற்ற வேண்டிய கடமை இதுவே.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

மகரிஷியின் மணிமொழிகள் :

“தான் உயரவும் பிறரை உயர்த்தவும் ஏற்றபயிற்சியும் தொண்டும்

மனவளக்கலையில் அடங்கியுள்ளன”.

“அறிவு – அறிவுக்கு அடிமையாவதே பக்தி, அறிவை அறிவால் அறியப்

பழகுதல் யோகம்”.

[ God is Omnipotent ] இறைவன் எல்லா ஆற்றலும் நிறைவாகப் பெற்றவன்.

அத்தன்மை மனிதனிடம் இருக்கின்றது.

[God is Omnicient] இறைவன் எல்லாம் அறிந்தவன். அத்தன்மையும்

மனிதனிடம் இருக்கின்றது.

[God is Omnipresent] இறைவன் எங்கும் இருப்பவன். மனிதனும்

அந்நிலையை எய்த முடியும்.

மனிதனிடம் கடவுள் தன்மை எல்லாமே இருப்பதோடு, கடவுளை அறிந்து

கொள்ளும் பெருமையும் இருக்கிறது. ஒரு வழியில் பார்த்தால் மனிதன்

இறைவனைவிட ஒருபடி மேலானவன் என்று கொள்ளலாம். அவனிடம்


இறைத்தன்மை எல்லாம் இருக்கின்றன. ஆராய்ச்சியின் மூலமும்,

யோகத்தின் மூலமும் உள்ளது உள்ளபடியே தன்னுணர்வாக,

அகக்காட்சியாகப் பெற்றுவிட்டால் மனிதன் இறைத்தன்மையை

முழுமையாகப் பெறுகிறான்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

 

NEXT      :  பிப்ரவரி 05 : முயற்சி – பயிற்சி

PREV      :  பிப்ரவரி 03 : ஆன்மீக இனிமை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!