வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
ஆன்மீக இனிமை:
“ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ஆன்மீக இனிமை சுரக்க நாம் தொடர்ந்து ஆற்றவுள்ள பணிகள் பல:
1] மனித உடல் அமைப்பு அதன் மதிப்பு, இயக்க மேன்மை, பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு இவற்றை ஒவ்வொருவரும் உணரச் செய்ய வேண்டும்.
2] உடலுக்குள்ளாக இயங்கும் உயிர், அதன் மதிப்பு, இயக்கச் சீர்மை, விளைவுகள் இவ்வுயிரை ஒழுங்காக இயங்கச் செய்ய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நெறி முதலியவற்றை எல்லாரும் உணர வழி செய்ய வேண்டும்.
3] மனித உயிர் தனது விரைவான சுழலியக்கத்தால் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் சீவகாந்தத்தின் மதிப்பு, அதனுடைய அற்புதமான இயக்கங்கள், விளைவுகள், இதன் மூலம் அறிவானது எவ்வாறு உடல் வரையில் பரவி இன்பம், துன்பம், அமைதி பேரின்பம் எனும் நான்கு வகையாக மலர்கின்றன என்ற உண்மையையும், இதை முறைப்படுத்தி ஆளும் சீர்மையால் எவ்வாறு மனிதன் வாழ்க்கையின் நோக்கங்களை நிறைவு செய்து கொள்ள முடியும் என்ற அனுபவ அறிவையும் அனைவரும் பெற வழி செய்ய வேண்டும்.
4] ஆதி நிலையில் இருப்பாற்றலாக, முற்றறிவாக உள்ள அருட்பேராற்றல் எவ்வாறு உயிர் மையத்தில் இடம் பெற்றுச் சிற்றறிவாக இயங்கி அனுபோக அனுபவத் தெளிவால் பேரறிவாக முழுமை பெறுகிறது என்ற மறை பொருளை மக்கள் உணர வழி செய்ய வேண்டும்.
5] பேரியக்க மண்டலத்தில் இருப்பு நிலையோடு பரமாணு எனும் விண்ணில் எழும் விரிவு அலை ஊடுருவி வான் காந்தமாக அமைந்து எல்லா இயக்கங்களையும் துல்லியமாக நடத்துகின்றது என்ற சீரியக்க நீதியை சிந்தனையால் ஒவ்வொருவரும் உணரச் செய்ய வேண்டும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“ஆறாவது அறிவின் கூர்மை தான் சிந்தனை;
சிந்தனை தான் அறியாமையை அகற்றி
அறிவை முழுமையாக்க வல்லது”.
“விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ
எண்ணத்தில் நிறைந்திடு, செய்கையில் சிறந்திடு.”
மகிழ்ச்சி பெருக :-
“ஆங்காங்கே சங்கங்கள் தோன்றும் போது
அவர்கட்குத் தவச்சாலை அமைய வேண்டி
ஆங்காங்கு அன்பர்கட்கு ஊக்கமூட்டி
அமைக்கின்றேன் ஆசிரமக் கட்டிடங்கள் ;
ஆங்காங்கு வெள்ளம் போல் மக்கள் கூடி
ஆதரிக்க என் மனதில் நிறைவு கொண்டு
ஆங்காங்கு ‘மகிழ்ச்சியினை’ அன்பர்கட்கு
அவ்வப்போது தெரிவிப்பேன், புகழ்ச்சிக்கல்ல.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 04 : மெய்விளக்கக் கல்வி
PREV : பிப்ரவரி 02 : நமது கடமை