வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
பேரறிவில் தோய்வோம்
உலக வாழ்வில் பொருள், மக்கள், பால் (Sex), புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமை உணர்வோடும், அளவு, முறை அறிந்தும் விழிப்போடு இப்பற்றுக்களை வளர்த்துக் காத்துக் கொள்ள வேண்டியது பிறவிப் பயனை எய்த அவசியமானது. நீரில் குளிப்பது தேவைதான்; ஆனால், நீரில் மூழ்கி விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்வுக்குப் பலவகையிலும் தேவை தான்; ஆனால், நெருப்பு எரித்து விடாமலும் காத்துக் கொள்ள வேண்டும்.
எந்த இடத்தில் மனிதன் மேலே சொல்லப்பட்ட ஐவகைப் பற்றுதல்களால் அறிவு குறுகி மயங்கித் தன் பிறவி நோக்கத்தையும், வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ, அதே நேரத்தில், மனிதனிடத்தில் அமைந்துள்ள அடித்தள ஆற்றலாகிய பேரறிவு, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புகிறது.அப்போது விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே துன்பமாக, சிக்கலாக, கருத்துப் பிணக்காகப் பெற்றுப் புற மனம் குழப்பமடைகிறது.
இத்துன்பங்களிலிருந்து புறமனத்தை மீட்க, பேரறிவு, விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும், மனிதர்கள் மூலமாகவும் உதவிக் கொண்டே தான் இருக்கும்.
இந்த நிலையிலேனும், புறமன இயக்கத்திலேயே குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்கக்களமான அருட்பேராற்றலை நினைவு கொள்ள வேண்டும். பேரறிவின் நிலைக்கு அந்நினைவு அழைத்துச் சென்று ஒன்றவைத்துவிடும். இவ்வகையில் பேரறிவில் புறமனம் தோய்வு பெறும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
விழிப்பு நிலை சீவன்முக்தி:
“செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்
சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்
செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை
சிந்திப்பீர் ! இதனைவிட வேறு நீயார்?
செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்
சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்
செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்
சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : நவம்பர் 18 : மனதின் மூன்று நிலைகள்
PREV : நவம்பர் 16 : இறைவனின் கருவி