x

நவம்பர் 11 : மக்களின் அறிவு வளர்ச்சி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மக்களின் அறிவு வளர்ச்சி :

அறியாமை என்ற மயக்கத்தில் வாழும் மக்களுக்கு மேலும் மயக்கத்தையூட்டி அதன் மூலமே வயிறு வளர்த்து வாழும் ஒருவரை தவறுதலாக அறிவாளி என்றோ, பெரிய மனிதர் என்றோ, அரசியல் தலைவர் என்றோ, சாது என்றோ, ஞானி என்றோ, மக்கள் கருதும் வழக்கில் உலகில் சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வருகின்றது.

யார் எந்தக் கருத்தை வெளியிட்டாலும், இயற்கையமைப்பு, மனித இன வரலாறு, முன்னோர் கருத்து, தற்கால உலகப் போக்கு தனது அறிவு நிலை, விஞ்ஞானம், இவைகளோடு அதை ஒப்பிட்டு ஆராய்ந்து தெளிவு காணும் அளவிற்கு, உலக மக்களின் அறிவு நிலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது.

தனித்த ஒரு மனிதனையோ, அவன் கருத்தையோ, சிறப்பித்துப் பேசிக்கொண்டிருப்பதிலேயே காலம் கழித்து, தான் பயனற்றுப் போகும் அறியாமை இருள், சுய ஆராய்ச்சியால் மக்களிடமிருந்து விலகி வருகிறது.
இதன் விளைவாக மனிதன் மகத்துவத்தை மனிதன் அறிந்து மனிதனாகவே வாழத்தக்க சூழ்நிலைகள் உலக முழுவதும் குறுகிய காலத்திலேயே உருவாகிவிடும் என்பது திண்ணம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

உள்ளத்தின் நிலை :

“ஒரு மனிதன் அறிவு எவ்வெவ்விதத்து

உருவாகி வலுப்பெற்று உளதோ அந்தத்

திருநிலைக்கு ஏற்றபடி சிந்தை செல்லும்

செயல்களும் விளைவுகளும் பயனாய்க்காணும்;

வருபயனை உணர்ந்தறிவை வளப்படுத்தும்

வழக்க பழக்கங்களால் மட்டும் மாறும்,

பெரு வளமும் நலமும் சாதனையால் மட்டும்

பெற காக்க முடியும், பிறர் அளிக்க நில்லா”.

அறிவின் வளர்ச்சி :

“அறிந்த அனைத்தையும் அறிவித்தோர் இல்லை

அறிவித்த அனைத்தையும் அறிந்தோரும் இல்லை

அறிந்த பலரிடம் அறிந்ததும் அனுபவ

அறிவும் இணைந்ததே அறிவின் வளர்ச்சியாம். “

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :    நவம்பர் 12 : தாத்தாவும் பேரனும்

PREV      :    நவம்பர் 10 : அலையின் தன்மை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!