x

நவம்பர் 09 : உயிரும் மனமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உயிரும் மனமும் :

“உலகில் பிறந்த எல்லா உயிர்களும் வாழ நினைக்கின்றன. மனிதனும் வாழ நினைக்கிறான். துன்பமில்லாத இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கையை அவன் நாடுகிறான்.வாழ்வின் நோக்கத்திற்கு முரண்பாடாக வாழ்வு அமையுமானால் அது துன்பம் தான் தரும். இயற்கையாகக் கிடைக்க வேண்டிய இன்பம் தடுக்கப்படுகிறது. வாழ்க்கையையும், வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வது தான் ஞானம்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரிவதில்லை. பெரும்பாலும் பழக்கத்தின் காரணமாகவே தவறுகள் செய்யப்படுகின்றன. அதிலும் சூழ்நிலை நிர்பந்தத்தால் செய்யப்படும் தவறுகளே மிகுதியாக உள்ளன. மனம் புலன் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும், சூழ்நிலைக் கவர்ச்சியிலேயே நிற்கும் போதும் பழக்கத்தின் அழுத்தத்தால் உந்தப்பட்டுச் செயலாற்றும் போதும் பெரும்பாலும் தவறுகள் தெரிவதில்லை.

இதனால் வந்த வேலை, பிறவியின் நோக்கம் மறந்து போகிறது. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் முதலான ஆறுகுணங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாகப் பஞ்ச மகா பாதகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதைப் பார்க்கிறோம்.தவறிழைப்பது மனம். இனி தவறு செய்துவிடக் கூடாது எனத் தீர்மானிப்பதும் அதே மனம். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் அதே மனமே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

குருவின் தொடர்பு :

“உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்

உயர் ஞான தீட்சையினால் உள்ளொடுங்கி

மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்

மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க

ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்

ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு

செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்

சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்”.

குருவின் உதவி :

“தந்தைதாய் ஈருயிரும் ஒன்று சேர்ந்து,

தழைத்துஒரு உடலாகி உலகில் வந்தேன்;

அந்தஈருயிர்வினைகள் அறமோ மற்றோ

அளித்தபதி வுகள்எல்லாம் என்சொத் தாச்சு.

இந்தஅரும் பிறவியில்முன் வினைய றுத்து,

எல்லையில்லா மெய்ப்பொருளை அடைவ தற்கு,


வந்தஒரு உதவிகுரு உயிரின் சேர்க்கை,

வணங்கிகுரு திருவடியை வாழ்த்தி வாழ்வேன்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :   நவம்பர் 10 : அலையின் தன்மை

PREV      :   நவம்பர் 08 : முயற்சியளவே ஞான விளைவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!