வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
யோகப் பயிற்சி:
தோற்றப் பொருட்களைப் பற்றி அறியும் விஞ்ஞான அறிவோடு, தோன்றாத மறைபொருட்களாக உள்ள மனம், உயிர், மெய் இம்மூன்றையும் அறிய வேண்டும். இதற்கு முறையான உளப்பயிற்சி அகத்தவம் [தியானம்] ஒன்றுதான் சிறந்த வழி.
இத்தகைய உளப்பயிற்சியினால் அறிவானது கூர்மையும், நுண்மையும் அமைதியும், உறுதியும் தெளிவும் பெறும்; பேரியக்க மண்டலம் முழுவதும் தனக்குள்ளாக்கி விரிந்து நின்று ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெறுகிறது. இதனால் எல்லாப் பொருட்களின் தன்மைகளையும் உணர்ந்துகொள்ள முடிகிறது.
பிற உயிர் பெறும் இன்ப துன்ப உணர்வுகளின் தன்மையை ஊடுறுவி நின்று அறியும் நுட்பமும் உயிர்கள் படும் துன்பத்தை இயன்றவரை போக்க உதவும் தகைமையும், எவ்வுயிருக்கும் துன்பம் விளைக்காமல் தனது தேவை விருப்பம் இவற்றை நிறைவு செய்து கொள்ளும் ஒழுக்கப் பண்பும் இயல்பாக உருவாகி விடும். எனவே யோக சாதனையால் மனிதன் அறிவிலும், செயலிலும் சிறந்து விளங்க முடியும். இவையெல்லாம் பொதுவாக யோகப் பயிற்சியினால் மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பயன்கள்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
வாழ்க்கை நெறியே யோகம் :
“தீயவினைப் பதிவுகளைத் திருத்திப் போக்கித்
தெளிந்த அறிவின் விழிப்பில் நிலைத்து என்றும்
தூயவினை, தேர்ந்தாற்றித் துன்பம் நீக்கும்
தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
நிறைவாழ்வாம் நெறியதுவே யோகமாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : டிசம்பர் 28 : தன்னிலை அறிந்தவன்
PREV : டிசம்பர் 26 : தொடரும் பதிவுகள்