வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
அவரவர் துன்பத்திற்கு அவரவரே காரணம் :
வினா : “நம் வாழ்வில் ஏற்படும் துன்பத்திற்கு நாமே காரணமாக எப்படி இருக்க முடியும்?”
விடை : “உங்களுக்குத் துன்பம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைப்பில் தான் துன்பம் இருக்கிறது. உண்மையில் அது துன்பமே இல்லை. உங்களுக்கு 85 வயது என்றும் உங்கள் அப்பாவுக்கு 110 வயது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அவர் இறந்துவிட்டார். நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். உண்மையில் அது துன்பமா? இன்னும் இருந்தால் இரண்டுபேருக்குமே துன்பமாக இருக்கும். இம்மாதிரி எத்தனையோ இன்பத்தைத் துன்பமாக நினைக்கிறோம்.
அதிகமாகச் சாப்பிட்டால் துன்பம் வரும் என்பது தெரியுமே. ஆனால் சாப்பிடும் போது இன்பமாக இருக்கிறதே. அளவோடு யார் நிற்கிறார்கள்? அஜீரணம் வருகிறது. எனக்கு இவ்வளவு சொத்து இருந்தால் தான் இன்பம் என்று நினைக்கிறார்கள். அப்படி எதிர்பார்க்கும் போது கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படுகிறார்கள். உண்மையில் அது கிடைத்து தான் வாழ வேண்டும் என்பதில்லை. ஆனாலும் கூட எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள். யார்மேல் குற்றம்?”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
(..மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.)
அருள் தொண்டு:-
“குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்;
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்,
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.”
வாழ்க்கைக் கடமை:-
“ஆக்க முறையால் அன்றிப் பிறர் உழைத்து
ஆக்கிவைத்த பொருள் கவர்ந்து பிழைக்க மாட்டோம்;
நீக்கமற நிறைந்த நிலை நினைவிற் கொண்டே
நிலையற்ற வாழ்க்கையிலே கடமை செய்வோம்.”
யோகம் :-
“எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,
எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.