வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
தன் முனைப்பு (Ego) :
உயிர்கள் அனைத்திலும் மேன்மையானவன் மனிதன். மனிதன் உடற்கருவிகளின் சிறப்பு வியத்தகு முறையில் அமைந்துள்ளன. ஐம்புலன்களால் உணர முடியாத இயற்கை ரகசியங்களை எல்லாம் உணரத்தக்க பேராற்றல் ஆறாவது அறிவாக மனிதனிடம் மிளிர்கின்றது. ஆறாவது அறிவு முழுமை பெற்று தன்னையறியும் வரையில் புலன் கவர்ச்சி மயக்கத்தில் தன்னை மறந்து நிற்கிறான்.உடலமைப்பு, வலிவு, செயல் திறன், கல்வி, அறிவு நுட்பம், புகழ் இவை ஒருவருக்கொருவர் வேறுபட்ட தரங்களில் அமைந்து இருக்கின்றன.
அறிவின் மயக்க நிலையில் தனக்கு மூலமும் முடிவுமான ஒரு பேரியக்க நிலையையும் அதன் ஆற்றலையும் மறந்திருப்பதால் அவன் அடைந்துள்ள எந்த உயர்வும் அவனுக்கு ஒரு செருக்கான மன நிலையில் அமைகின்றது. இந்த அறிவின் மயக்கச் செருக்குதான் தன்முனைப்பு ஆகும். இது ஒரு திரை போன்று அறிவின் ஒளியை மறைத்து நிற்கின்றது.
அவன் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்கிறான். ஆனால் கண்கள் அவனால் செய்து கொள்ளப்பட்டவை அல்ல. நறுமணங்களை முகர்ந்து மகிழ்கிறான். மூக்கு அவனால் செய்து கொள்ளப்பட்டதல்ல. இது போன்றே அவன் காது, நாக்கு, தொட்டுணர் கருவி, மற்ற உறுப்புக்கள் எல்லாவற்றையும் கொண்டு இயக்கி உலகப் பொருட்களைத் துய்த்து மகிழ்கிறான். இவற்றில் எதுவும் இவனால் ஆக்கப்பட்டது அல்ல. இவனுக்கு உள்ளும் புறமும், தொடக்கமாகவும், முடிவாகவும் ஒரு பேராற்றளால் இவை எல்லாம் தோன்றின; இயங்கிக் கொண்டும் இருக்கின்றன.
மனிதன் உடலோ அணுக்களால் ஆகிய ஒரு கூட்டு இயக்க வடிவம். உயிரும் நுண்ணியக்க ஆற்றலே. இவ்விரண்டும் எல்லாம் வல்ல பரம்பொருளின் மலர்ச்சிகளே. சூக்கும வடிவமாகிய உயிர் உடலோடு கொண்ட தொடர்பால் இன்ப துன்ப உணர்ச்சிகள் எழுகின்றன. இந்த உணர்ச்சி நிலைகளால் கட்டுண்ட மனிதன் தன் ஆன்ம நிலையை மறந்து, புலன் மயக்க நிலையில் மயங்கிச் செருக்குற்றிருக்கிறான். இந்த மயக்கச் செருக்கிலிருந்து பிறப்பனவே ஆறு தீய குணங்களும். அவற்றால் விளையும் தீமைகளே துன்பங்களும் வாழ்க்கைச் சிக்கல்களும் ஆகும்; தவறான பழிச் செயல்களும் பாவப் பதிவுகளுமாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம்:
“தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து
தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்
ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்
ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்
மேன்மைக்கே மனம் உயரும் பிறர் தவற்றால்
மிக வருத்தம் துன்பமது வந்த போதும்
நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு
நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்.”
நல்லோர் உள்ளமும் பொறாமையால் கெடும் :
“நல்ல உள்ளம் பண்பட்ட குடும்ப மேன்மை
நாடறிந்த புகழ் வாழ்க்கை அமைந்துள்ளோர்க்கும்
மெல்ல ஒரு நபர் மீது பொறாமை வந்தால்
மிகுந்து அது உள்ளத்தை நச்சு ஆக்கி
செல்லரித்த புத்தகம்போல் சீர்மை கெட்டுச்
செயல் திறனைச் சிறக்கவிடா துண்மை கண்டோம்
வல்ல மனவளக்கலையைப் பயில்கின்றோரே
வாழ்த்துகின்றேன் வாழ்வீரே பொறாமைவிட்டு.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : டிசம்பர் 20 : பெண்ணின் பெருமை
PREV : டிசம்பர் 18 : சிந்தாமணி