x

டிசம்பர் 18 : சிந்தாமணி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


சிந்தாமணி :

சிந்தாமணி. சிந்தை மணியான நிலை. அறிவு சலனமற்று, புலனடக்கம் பெற்று, உறுதி பெற்ற நிலை. தன் உயிர் நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூலநிலை அறியும் ஆர்வம் எழுகின்றது. சிந்தனை உயர்ந்து, உயிர் விரைவைச் சிறிது சிறிதாகத் தவத்தின் மூலம் குறைத்துக் கொண்டே போய், முடிவாகத்தான் இயக்க மற்ற அமைதி நிலையைப் பெறுகின்றது. மெய்ப்பொருளாகி விடுகின்றது. தனது இருப்பு நிலை அணு முதற் கொண்டு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பாலுள்ள பெருவெளி வரையில் நிறைந்து இருக்கும் பெருமையினை உணர்ந்து கொள்கின்றது.

தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள தெய்வீகத் தொடர்பு அதன் ஒழுங்கமைப்பும் உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகின்றது. இந்த நிலை தான் சிந்தாமணி. இது தான் மனிதனின் முழுமைப் பேறு. இதற்கு ஆன்மா தன்னையறிய வேண்டும். அப்போது தான் அமைதி பிறக்கும். பிறப்பும் அறும். பழிச்செயல்கள் கழிக்கப் பெற வேண்டும். அப்போது தான் தூய்மை பெறும். தன்னிலை மறந்து, ஆன்மா புறக் கவர்ச்சியில் மயங்கி செயலாற்றும் போது, ஆசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய ஆறு குணங்களாக நிலைமாறி இயங்குகிறது.

இதன் விளைவாகவே பழிச் செயல்கள் விளைகின்றன. உள்ளத்தில் களங்கமும் உடலில் நோயும் பதிவாயின. இதனால் ஆன்மா சிறுமைப்பட்டுத் துன்புறுகின்றது. இந்த நிலையிலிருந்து ஒரு நல்ல திருப்பம் அதற்குக் கொடுத்தாக வேண்டும்.
எனவே இச்சையே தொழிலாக உடைய ஆன்மாவை அதன் போக்கிலிருந்து திருப்பிவிட வேண்டும். இது மனித குலத்திற்கு இன்றியமையாதது என்று நம் முன்னோர்கள் கண்டனர். புறத் தோற்றங்களால் கவரப்பெற்று புலன் வரையில் இயங்கும் ஆன்மாவிற்கு ஒரு உயர்வு கிட்ட வேண்டுமெனில் தன் விருப்பம்போல் நிலைத்து நிற்க முறையான உளப்பயிற்சி அவசியம். அனுபவத்தால் தேர்ந்த அப்பயிற்சி

[1] ஒர்மைநிலை (Concentration),

[2] அடக்கநிலை (Meditation),

[3] ஒடுக்கநிலை (samadhi),

என மூன்று பிரிவுகளில் அடங்கும். அறிவு ஓர்மை பெற்று அடங்கி லயமாகும். இப்பயிற்சியே ஆலயம். “ஆ + லயம்” = ஆன்மலயம் என்று வழங்கப்பெறுகின்றது. மூன்று படிகளான ஆலய முறைகளில் முதன் முதல் தேவையானதும், பயன் மிகுந்ததும், எளிதானதும் ஓர்மை நிலைப் பயிற்சியே.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

ஆன்மநிலை அறிவது ஏன்?

“ஆன்மநிலை அறிவதனால் பயன்ஏன்? என்றால்

அனைவர்களும் அனுபவிக்கும் இன்பதுன்பம்,

ஏன் எதனால் வந்ததென்று அவ்வப்போது

எளிதாக விளங்கிவிடும், அதற்கு ஏற்ப

ஊன்உருவ உடல் இயக்கத் தேவைகண்டு,

உள்ளத்தைப் புலன் மயக்கில் ஆழ்த்திடாது,

மேன்மையுடன் தனிமனிதன் கடமையாற்றி,

மிகச்சிறப்பாய் ஒழுக்கமுடன் வாழலாகும்.”


நல்லோர் உள்ளமும் பொறாமையால் கெடும் :

“நல்ல உள்ளம் பண்பட்ட குடும்ப மேன்மை

நாடறிந்த புகழ் வாழ்க்கை அமைந்துள்ளோர்க்கும்

மெல்ல ஒரு நபர் மீது பொறாமை வந்தால்

மிகுந்து அது உள்ளத்தை நச்சு ஆக்கி

செல்லரித்த புத்தகம்போல் சீர்மை கெட்டுச்

செயல் திறனைச் சிறக்கவிடா துண்மை கண்டோம்

வல்ல மனவளக்கலையைப் பயில்கின்றோரே

வாழ்த்துகின்றேன் வாழ்வீரே பொறாமைவிட்டு.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  டிசம்பர் 19 : தன் முனைப்பு (Ego)

PREV      :   டிசம்பர் 17 : உயர் நிலைக்கான பயிற்சி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!