x

டிசம்பர் 17 : உயர் நிலைக்கான பயிற்சி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உயர் நிலைக்கான பயிற்சி :

“எல்லாம் வல்ல பரம்பொருள் (Providence) எனக்கு வேண்டியதையெல்லாம் உரிய காலத்தில் கிடைக்குமாறு வைத்திருக்கும் பொழுது, அந்தப் பரம்பொருள் இந்த இயற்கையாக, பிரபஞ்சமாக, உலகமாக மக்களாக, எனக்கு உரியவர்களாக, என்னுடைய அறிவாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் அளித்துக் கொண்டே இருக்கிறபோது, “நான் எதற்காக இது இல்லை, அது இல்லை என்று குறைபட்டுக் கொள்ள வேண்டும் பிச்சை எடுக்க வேண்டும்?” என்ற நிலை ஏற்படும். செய்ய வேண்டியதை மனம் கோணாமல் செய்துவிட்டு, கவலைப்படாமல், பிறரை நொந்து கொள்ளாமல் இரு.

உனக்கு முரண்பட்டவர்கள் என யாரேனும் இருந்தால் அவர்களை வாழ்த்திக் கொண்டே இரு. உன்னை வாழ்த்திக் கொள், உன் குடும்பத்தை வாழ்த்து, சுற்றத்தாரை வாழ்த்து, சமுதாயத்தை வாழ்த்து. மன அமைதியைப் பேணும் வகையிலே தியானம், சிந்தனை, அகத்தாய்வு, இவற்றில் தொடர்ந்து ஈடுபாடு. உடற்பயிற்சியையும் நன்கு செய்துவா.
இவ்வாறு ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பயிற்சியைக் கைக்கொண்டால் வேறு எந்த ஞானமும் வேண்டாம். இன்னும் ஒரு கடவுளும் வேண்டாம், ஏனென்றால் எந்தச் செயல் செய்தாலும் அங்கே விளைவு கடவுள் செயல்தான். (That is the Cause and Effect system).

அது இயற்கையினுடைய விளைவு தான். நீ செய்யும் செயலுக்குத்தக்கவாறு, பொருளுக்கு தக்கவாறு உனக்கு இன்பமோ துன்பமோ, வெகுமதியாகவும் தண்டனையாகவும் கொடுத்துக் கொண்டே இருப்பது எதுவோ அதுவே தான் எல்லாம் வல்ல இறை. ஆகவே அந்த இறைவனை உன்னுடைய செயலின் விளைவாகக் காலையிலிருந்து மாலை வரையில் பார்த்து மதிப்புக் கொடுத்து வா. அதுவே கடவுள் வணக்கம். அதைவிட்டுத் தனியாக ஒரு கடவுளைத் தேட வேண்டாம்.
ஞானமானது நம் நாட்டில் பிறந்தது தான். “துறவு” என்ற தத்துவம் இங்கே ஜனித்தது தான்; ஆனால் அது குழப்பப்பட்டு இருக்கிறது. “துறவு” என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்கேயாகிலும் ஓடிவிடுவது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது.

இடம் மாறினால் துறவாகி விடுமா என்ன. ஒருவர் சென்னையிலுள்ள அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கிறார். அவரை 500 மைல் தொலைவிலுள்ள ஊருக்கு மாற்றிவிட்டார்கள் என்றால் இன்னொரு இடத்துக்குத் தான் போய்விடுகிறார் – இது துறவாகுமா? அதே போல இடமாற்றமோ அல்லது செயல் மாற்றமோ வேறு எந்த வெளிமாற்றமோ துறவு அல்ல. உள்ளத்திலே ஒரு நிறைவு ஏற்பட வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் “அளவு” ஒன்று “முறை” ஒன்று என்று வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவு, முறை இவை மீறும்போது தான் துன்பம் உண்டாகிறது. இந்த முறை (Limitation and Method) இரண்டையும் கடைப்பிடித்தால் அதுதான் துறவு. இந்தக் கருத்தைத் தான் நான் ஒரு கவியில் எழுதியுள்ளேன்; “உறவிலே கண்ட உண்மைநிலைத் தெளிவு துறவு எனப்படும்,” என்று.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

உறவும் துறவும்:-

“உறவிலே அமைந்துள்ள உண்மையை உணர்ந்திடு

துறவிலே உள உள்ளத் தூய்மை பெற்றுய்யலாம்.”

போலித் துறவிகள் :-

“வாழவகையறியாதோர் வாழ்க்கைக் கேற்ற

வசதிகளே இல்லாதோர் சோம்பல் மிக்கோர்


கோழை, கயவர், குற்றவாளியானோர்

கொடுத்தோ பெற்றோ கடனால் தோல்வி கண்டோர்

வாழையடி வாழையென பிட்சையேற்றே

வாழ்ந்துவரும் பரம்பரையார் இவர்கள்கூட

ஆழமனைதைப் பழக்கி அறிவறிந்து

அறம்புரியும் துறவிகள்போல் வேடங்கொள்வார்.”

துறந்தோர் காட்டிய வழி:-

“துறவறத்தில் அறிஞர் பல கண்டதென்ன?

சோறு துணி வீடு இவை தோற்று தற்கும்

பிற ஏதும் எளிய வழி போதித்தாரா?

பிச்சை எடு! தொண்டு புரி! பற்று விட்டு

அறநெறி நில்! போதனை செய்! ஐம்புலன்கள்

அடங்க மன ஓர்மைக்கு மௌனம் போற்று!

மறவாதே மயங்காதே என்று சொன்னார்.

மனிதரெலாம் இவையேற்றால் உலகு என்னாம்?.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  டிசம்பர் 18 : சிந்தாமணி

PREV      : டிசம்பர் 16 : ஆறாவது அறிவு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!