x

டிசம்பர் 14 : தெய்வம் படும் பாடு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தெய்வம் படும் பாடு :

இறைவழிப்பாட்டின் மதிப்புணர்ந்து முதற் காலத்தில் ஆன்மீகத் துறையில் சிந்தனை செலுத்திய மகான்கள் அகத்தவத்தின் மூலம் மெய்பொருள் கண்டார்கள். அதை மொழி விளக்கம் செய்த போது அது வேதாந்தம் ஆயிற்று.அக்காலத்தில் அறிவில் போதிய வளர்ச்சி பெறாத மக்களுக்கு பக்தி வழி போதனை தொடங்கியது. இறைவனை தனித்த சன்னியாசியாக காட்டி அதற்கு ஏற்ற உருவம் கற்பித்து வணங்கச் செய்தார்கள்.

மத்திய காலத்தில் பக்தி வழியில் இறைவழிபாடு மாற்றம் பெற்றது. மனிதனுடைய மன இயல்பை வைத்துக் கடவுளைக் கற்பித்தார்கள். தனியாக இறைவனுக்குச் சிலை வைத்து வணங்குவது சிலருக்கும் பொருந்தவில்லை. இறைவன் தனியாக இருந்தது கண்டு பரிதாபப்பட்டார்கள். இறைவனுக்கு அருகில் சக்தியை வைத்து வணங்குவதற்கு முற்பட்டார்கள் தெய்வங்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மத்திய கால பிற்பகுதியில் தெய்வங்களைப் பழிவாங்க நினைத்தார்கள் சிலர். மனிதன் குழந்தைகளைப் பெற்று படும்பாட்டை தெய்வமே பட்டுப் பார்க்கட்டும் என்ற கருத்தில் தெய்வங்களுக்குப் பிள்ளைகளை உருவாக்கினார்கள் !தற்கால விஞ்ஞான யுகத்தில் பக்தி மார்க்கத்தில் ஒரு புதுமை மலர்ந்தது. கடவுள்களுக்கு அலங்காரம், பொன், வைர நகைகளும், வாண வேடிக்கை முதலியனவும் கூட்டப்பெற்றன.

காலத்திற்கு ஏற்ப தெய்வங்களுக்கு ஆடைகளும் மாற்றப்பட்டன. முதற்காலத்தில் காட்டு மிருகங்களின் தோல்கள் உடுத்தப்பட்டன. பிறகு நார், பட்டு, உடைகள் உடுத்தப்பட்டன. இக்காலத்தில் நைலான் துணிகள் அணியப்பட்டு வருகின்றன. மனிதனைப் படைத்த கடவுள், மனிதனுக்கு அறிவாற்றலை அளித்தது. அறிவில் திசைமாறிய மனிதன் தெய்வத்தையே ‘அல்லலுக்கு உள்ளாக்கி விட்டான்’. தெய்வமே தானாகவும் உள்ளது என்ற உண்மையை பெரும்பாலோர் உணரும் வரையில் மனிதன் படும்பாடெல்லாம் தெய்வம் படுவதாகக் காட்டும் நகைச்சுவை (humorous) நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

அத்வைதம், துவைதம் :

“கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்

கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்;

கற்கண்டைக் கரும்பு-ரசம் என்றால் அஃது

கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்;

கற்கண்டு கரும்புரசம் வேறு வேராய்க்

காட்டுவது துவித நிலை விளக்கம்;

கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்

கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால். “

இறைநிலை:

“தெய்வத்தை நாடுவதும் தெளிந் தறிவில் தேறுவதும்

திருநிலையாம் மனிதனவன் பிறவி நோக்கம் பயனாம்


தெய்வநிலை தெரிந்து கொண்டேன் திருவருளே நானாகத்

திகழும் அனுபவம் எனக்கு இல்லை யென்பர் சில்லோர்;

தெய்வமெனும் பாலைப் பிறை இட்டுத்தயிராக்கிப் பின்

தேடுகிறார் பாலை, அதைக் காணேன் என்றால் மயக்கே;

தெய்வம் உயிர்க்குள் அறிவாய் அதன் படர்க்கையிலே

திகழ்கிறது மனமாகத் தேடுவது எதை? எங்கே?.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : டிசம்பர் 15 : தெய்வீக உறவு

PREV      :  டிசம்பர் 13 : வாழ்க்கையின் சிற்பி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!