x

டிசம்பர் 06 : நிலையும் அலையும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


நிலையும் அலையும் :

“இறைவெளியாகிய பிரம்ம நிலை, அதன் இயல்பான தன்மைகள் – பூரணம், அறிவு, விரைவு என்பன வெளிக்காட்டாத இருப்பு நிலையாகும். “பிரம்மம்” எனும் புனிதப் பொருளை, அகத்தால் நோக்கும் போது அது பூரணமானது, முற்றறிவாக உள்ளது : அனைத்தியக்கங்களுக்கும் மூலமான “அழுத்தம்” எனும் விரைவடக்கமானது என்று கொள்ள வேண்டும். பிரம்மம் வேறு, பூரணம் வேறு, அறிவு வேறு, விரைவு மூலமான அழுத்தம் வேறாகக் கருதவே முடியாது.

பிரம்மமே பூரணமாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும் உள்ளது, என்றுதான் கொள்ள வேண்டும். பூரணமே, பிரம்மமாகவும் அறிவாகவும் ஆற்றலாகவும் உள்ளது. அறிவே பிரம்மமாகவும், பூரணமாகவும், ஆற்றலாகவும் இருக்கிறது. ஆற்றலே பூரணமாகவும், பிரம்மமாகவும், அறிவாகவும் இருக்கிறதென்று ஒவ்வொரு தத்துவத்திலும் நான்கையும் சேர்த்தே மதிக்க வேண்டும். அகப் பொருளான “அறிவு” தான் எல்லாப் பொருளிலும், இயக்கத்திலும், ஒழுங்காற்றலெனும் சீரமைப்புத் திறனாக முகிழ்ந்து செயல் புரிகின்றது.

கருமையக் காந்தத் திணிவில் அடிப்படை ஆற்றலாக இருப்பது “இறையாற்றல்” இதில் அடக்கமாகவுள்ள – அறிவு, காந்த நிலையில் புலன்கள் மூலம் இயங்கும் போது “மனம்” எனப்படுகின்றது. நிலையாக உள்ளது “அறிவு” அலையாக உள்ளது “மனம்” விளக்கும் – வெளிச்சமும் போல, நீரும்-அலையும் போல, நிலையாக அறிவும், அலையாக மனமும் உள்ளன.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

“இறைநிலையின் பேரறிவை, தத்துவத்தைத் தெளிவாய்

எவராலும் மொழிமூலம் விளக்க முடியாது,

முறையாக எப்பொருளும் இயங்குதற்கு ஏற்ற

உருவமைப்பு, குணம், காலம், ஒழுங்கமைப்பு எல்லாம்

நிறைவாக தவறு இன்றி எவ்வியக்கமதிலும்

நேர்மையோடு நிகழ்த்தும் ஒழுங்காற்றலே அறிவாம்;

மறைபொருளாய் அமைந்த இந்த மாஅறிவுதனை நாம்

மதிப்போடு இறைநிலையின் பேரறிவு என்போம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      : டிசம்பர் 07 : அமைதி அடைவோம்

PREV      : டிசம்பர் 05 : பிரமச்சரியமும் ஞானமும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!