x

டிசம்பர் 03 : கருமையப் பதிவுகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


கருமையப் பதிவுகள் :

ஒரு மயிலைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த மயிலின் உருவம் பார்ப்பவர்களின் கண்களுக்கு வரும்போது அந்தக் கண்களில் மிகச்சிறிய உருவமாக பிரதிபலிக்கிறது. இப்படிச் சுருக்கம் பெற்ற மயிலின் உருவமானது எப்போது மூளை செல்களில் மோதுகிறதோ அப்போது அந்த மூளை செல்கள் அதைப் பதிவு செய்து கொள்கின்றன.

எப்படி ஒரு ஒலியானது பதவு நாடாவில் பதிவு செய்யப்படுகிறதோ அதேபோல மயிலின் உருவமானது அந்த மயிலைப் பற்றிய தன்மைகள் எல்லாம் அடங்கிய அழுத்த அலையாகச் சுருங்கி புள்ளி வடிவில் பதிவாகிறது.மூளை செல்களுக்கு வந்து சேருகிற எந்த அலையானாலும் அது உடனே கருமையத்தால் ஈர்க்கப்பட்டு, உடலில் இருக்கும் சீவகாந்த ஆற்றலின் காரணமாக இருப்பாக வைக்கப்படுகிறது. மயிலைப் பார்த்து உணர்ந்த அனுபவத்திற்கு ஏற்பப் பார்ப்பவருடைய கருமையமானது தன்மை பெறுகிறது.

பின்னர் எப்பொழுதேனும் தேவையின் காரணமாகவோ, வேறு தூண்டுதல் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ மன அலைக்கு அதே அலை வரிசை ஏற்படும் போது, மூளை செல்கள் ஏற்கனவே அந்த அலை வரிசையில் விளைந்த பதிவுகளை விரித்துக் காட்டும், அப்படி விரித்துக் காட்டப்படும் போது பார்ப்பவர் பழைய அனுபவங்களையும், உணர்வுகளையும் எண்ணங்களாக நினைவு கூர்ந்திட முடியும். அதே தன்மையில் உணர்வின்பாற்பட்ட அலைகளும் எண்ண அலைகளும், பரு உடலில் ஏற்படும் அனுபவங்களால் விளையும் அலைகளும் கருமையத்துக்கு ஈர்க்கப்பட்டு இருப்பாக வைக்கப்படுகின்றன.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

“நிறைவுபெறா மல்இருக்கும் ஆசைகளின் கூட்டம்,

நெஞ்சம்மனம் பேச்சுஇடை பிணக்காகும் பொய்கள்,

மறைமுகமாய் நேர்முகமாய்ப் பிறர்உளம்வருத்தல்,

மற்றஉயிர் சுதந்திரமும் வாழ்வின்வளம் பறித்தல்,

நிறைவழிக்கும் பொறாமை, சினம், பகைவஞ்சம் காத்தல்,

நெறிபிறழ்ந்த உணவுழைப்பு உறக்கம்உட லுறவு,

கறைபடுத்தும் எண்ணம் இவை கருமையம் தன்னைக்

களங்கப்ப டுத்திவிடும் கருத்தொடுசீர் செய்வோம்.”

“பலஆயி ரம்பிறவி எடுத்துஏற்ற பாவப்

பதிவுகளை ஒருபிறவிக் காலத்தில் மாற்றி,

நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,

நல்வாய்ப்பு ஆற்றல்இவை கருணையோடு இயற்கை

நிலஉலகில் மனிதரிடம் அமைத்துளது உண்மை.

நேர்முகமாய்க் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றி,

பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்


பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்!”

“மனத்தூய்மை வினைத்தூய்மை மனிதன் வாழ்வில்

மகிழ்ச்சி, இனிமை, நிறைவு, அமைதி நல்கும்;

மனம்உயர நேர்மைவழி அகத்தவம் ஆம்

மற்றும் தன்வினை உயர அறமே ஆம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  டிசம்பர் 04 : கடமை

PREV      :   டிசம்பர் 02 : சேஷ்டையும் நிஷ்டையும்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!