வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வெற்றி மேல் வெற்றி :
“தேவையில்லாத ஆசை என்றால் அமைதியாகச் சிந்திப்பது நல்லது. “இந்த ஆசை எழுந்ததே தவறு இதை நிறைவு செய்தால் பல துன்பங்கள் வருமே எனவே இந்த ஆசையை நான் விட்டு விடுவேன்”, என்று தெளிவாக எண்ணி தவம் இயற்றிச் சங்கற்பம் மேற்கொள்ள வேண்டும். பின்னொருகால் இந்த ஆசை மனதில் தோன்றினாலும், முன்பே எடுத்து வைத்திருக்கும் முடிவும் கூடவே வந்து, அந்த ஆசையானது காலப்போக்கில் மறையும்.
அதேபோல் தேவை என்று கண்ட விடத்தும், நிறைவு செய்ய வசதி இல்லை என்றாலும் முன் சொன்னது போலவே ஆராய்ச்சியும் சங்கற்பமும் செய்து கொள்ள வேண்டும். தேவையும் வசதியும் ஒருங்கே இருந்தாலும் கூட பின் விளைவு தீங்கு தருவதென்றால் அந்த ஆசையையும் முன் சொன்ன அதே முறையில் சமம் செய்து கொள்ள வேண்டியது தான். நிறைவும் செய்யாமல் மாற்றவும் செய்யாமல் ஆசைகளை மனதில் சுமந்து கொண்டிருந்தால் மன அமைதி கெடும். உடலில் குன்மம் முதலிய நோய்கள் உண்டாகும்.
ஒரு ஆசையை இம்மாதிரி மனதில் வைத்திருக்கும் காலத்தில் எடுத்த காரியங்களிளெல்லாம் செயல் வேகம் குன்றி, திறமை மழுங்கி, தோல்வி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆசை, திட்டமிடல், செயல் (desire, approach, achievement) மூன்றும் சரியாக இருந்தால் வெற்றிமேல் வெற்றி வந்துகொண்டேயிருக்கும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * *
“இச்சை எழும்போதே காரணம் கண்டிடு
இச்சை முடித்திடச் சூழ்நிலை பார்த்திடு,
இச்சை முடித்தால் எழும் விளைவை யூகி,
இச்சை முறையாய் இயங்கும் அமைதியில்”.
“மண்மீது பெண்துணையால்
பொன் கொண்டே வாழ்கின்றோம்
மாற்றுவதேன் மூவாசை ?
மதிகொண்டே பயன்கொள்வோம்”.
இச்சையின் வலிவு:
“எச்செயலும் மூலமெனும் நினைப்பாலாகும்.
இன்ப துன்பக் காரணமு மதுவே தேர்வோம்,
இச்சைஎனும் தீயெழுந்து எரியும்போது
இயங்கு முடற் கருவிகளா லறிவைக் கொண்டு
அச்சமற அனுபவித்தே அணைக்கலாகும்;
அதற்கு ஒரு மாற்றமில்லை யதனால் மேலோர்
நச்சுவிளை இச்சைகளை விளைவிக்காத
நல்லொழுக்க வாழ்க்கை முறை வகுத்துள்ளார்கள்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஆகஸ்ட் 01 : இயற்கைச் சக்திக்கு உதவுவோம்
PREV : ஜூலை 30 : மனநிறைவு மனிதனுக்கு மகிழ்ச்சிச் சுரங்கம்