x

ஜூலை 24 : உயிர் உணர்வு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


உயிர் உணர்வு :

“உணர்ச்சிவயம் இல்லாத எண்ணங்களால் மனதின் இயக்க அலை நீளம் குறைகிறது. அதன் விளைவாக உயிரின் அதிர்வு வேகம் குறைகிறது. உடல் செயல்கள் எல்லாம் நல்ல ஒழுங்குக்கு வருகின்றன. நமது தவறு நமக்கே புலனாகிறது. திருத்தவும் முடிகிறது. நாமே தேடிக்கொண்ட அவசியமில்லாத பழக்கங்களிலிருந்து விடுபடவும் முடிகிறது. யோகத்தால் மனம் லயப்பட்ட பின்னரே இது நேர்கிறது. இந்த வல்லமை மனதுக்குக் கிட்டிய பின் மனிதர்கள் ஒவ்வொருவர் இடையில் உள்ள உறவும் சீர்படுகிறது.

உயிரைப் பற்றிய உணர்வு மறைந்துள்ள நிலையை பொருளுணர்வு என்கிறோம் (Material Consciousness). உயிரைப் பற்றிய தெளிவான அறிவும் அந்த விளக்கத்தை மறவாநிலையும் உயிருணர்வு (மெய்யுணர்வு அல்லது மெய்ப்பொருள் உணர்வு) எனப்படும் (Spiritual Consciousness). உயிருணர்வோடு செய்யப்படும் எச்செயலும் சிறக்கும், விளைவும் சிறக்கும். உயிருணர்வு பெறுவதற்காகவே எடுத்தது இந்தப் பிறவி. அவ்வுயிருணர்வின்படி மறவாது வாழவேண்டும். அதுவே ஆன்மீக வாழ்வு.

ஒவ்வொருவரும் இப்படி வாழ்வோமாயின், உலகத்திலே அமைதி நிலவும். உண்மையில் இயற்கையில் ஒரு கோளாறும் இல்லை. பொருளுணர்வோடு மனிதர்கள் செயல்படுவதாலேயே வறுமையும் துன்பமும் தோன்றின நிலவுகின்றன வளர்கின்றன. இன்று உலகத்தில் இல்லாதது ஒன்றே ஒன்று தான். மனிதனை மனிதன் மதித்து, புரிந்து கொண்டு ஒத்து உதவி வாழும் உணர்வைத் தரும் உயிர் உணர்வு இல்லை. அதனாலேயே குழப்பங்கள் பஞ்சம் இன்று மேலிட்டிருக்கின்றன. உலகத்தில் பாதுகாப்புக்காக (Defence) உற்பத்தி செய்யப்படும் தளவாடங்களை நிறுத்தி, ஆக்கப்பூர்வமான உற்பத்தியாக மாற்றினால் வாழ்க்கைத் தேவைப் பொருட்கள் இரண்டு பங்காக உயரும்.

காலவெள்ளம் நம்மை அடித்துச் செல்கிறது. நாமும் இந்த வெள்ளத்தின் மத்தியில் தான் வாழ்கிறோம். வாழும் காலத்தில் செய்யும் எந்தச் செயலும் உயிரறிவு பெற்றாலன்றிச் சிறக்காது. விஞ்ஞானத்தின் மூலம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி வெற்றி பெற வேண்டுமானால் ஆன்மீகம் தழைக்க வேண்டும். “

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * *

 

 

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும் :

உலக நல வேட்பு :

“உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்

உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.

உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க

ஓருலகக் கூட்டாச்சி வலுவாய் வேண்டும்.

உலகில் போர், பகை, அச்சமின்றி மக்கள்


உழைத்துண்டு, வளம் காத்து வாழ வேண்டும்.

உலகெங்கும் மனித குலம் அமைதியென்னும்

ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 25 : இயற்கையின் கருவூலம்

PREV      :  ஜூலை 23 : தவம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!