x

ஜூலை 21 : நமது துறை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


நமது துறை :

“நமது உலக சமுதாய சேவாசங்கத்தின் நோக்கம் மனித வாழ்வில் அமைதி காண்பதேயாகும். தன்னில் அமைதி, சமுதாய வாழ்வில் அமைதி, உலக அமைதி என மூன்று எல்லைகளைக் குறிப்பாகக் கொண்டு, ஒன்றோடு மற்றது ஒத்தும் உதவியும் நலம் காணும் முறையில் நமது செயல் திட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. நமது நோக்கத்தில் வெற்றிபெற வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் அமைந்து நாம் செயலில் இறங்கும் போது சில பல முன்னேற்றமான செயல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அவ்வாறான மாற்றங்களைச் செயல்படுத்த முயலும் போது அவற்றின் உட்கருத்துக்களை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது. அவரவர்கள் அறிவு வளர்ச்சி பெற்றுள்ள அளவில், அவர்கள் வாழ்வில் கண்ட அனுபவங்கள் வரையில் எல்லை கட்டிக்கொண்டு, அந்த எல்லைக்குட்பட்டே எல்லாரும் எல்லா நிகழ்ச்சிகளும், செயல்முறைகளும் உருவாக வேண்டும் நடைபெற வேண்டும் என்று எண்ணுவது இயல்பு. அத்தகையவர்களிடம் கருத்துப் பிணக்குக் கொள்ளாமல் நமது நோக்கங்களை அமைதியாக விளக்கி அவர்களையும் ஒன்றுகூட்டி செல்ல வேண்டும்.

நமது நோக்கம் உலக அமைதி, நமது செயல் முறை தொண்டு, நமது துறை ஆன்மீகம்…. அருள் விளக்கம்…. யோகம். இவற்றில் பிறரைக் கட்டுப்படுத்த இடமே இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தான் தகுதியாகவும், இனிமையாகவும் சீரமைத்துக் கொள்ள வேண்டும். அருள் தொண்டும், அற வாழ்வும் சிறப்புற அமைய சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றும் விழிப்போடு பழகி இவற்றை இயல்பாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைவும் இருக்கும்; குறைவும் இருக்கும். அவை யாவும் காண்போர் கருத்தின் எற்றத்தாழ்வேயாகும். எனவே நிறைவை நாடியே செல்வோம். இயற்கையில் அமைந்துள்ள ஆயிரமாயிரம் இன்பங்களை உணர்வோம், அனுபவிப்போம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

மகரிஷியின் அழைப்புக் கவி:

சேர வாரீர் :

“பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த

பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு

நலமொன்றே பலனான ஞானமார்க்கம்

நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப

சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்

சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து

உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி

உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்.

சிலை வணக்கத்தின் எல்லை:

“இறைநிலையே அறிவாக இருக்கும் போது

இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி


குறை போக்கப் பொருள்,புகழ்,செல்வாக்கு வேண்டி

கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;

நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண

நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று,

முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற

முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 22 : ஆட்சி முறை சிறக்க வேண்டும்

PREV      :   ஜூலை 20 : ஜீவ காந்த சக்தி

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!