வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
ஆதியே அனைத்தும் :
“இந்த அகண்டாகாரமாக உள்ள பிரபஞ்சத்தை நினைவில் கொள்வோம். தோற்றங்களாகவுள்ள எல்லாவற்றையும் கழித்து அவற்றின் மூலப் பொருளாகவுள்ள ஆகாசத்தை (Ethereal Particle) நினைத்துக் கொள்வோம். நுண்ணிய இயக்கத்துகள்கள் முதல் கொண்டு பெரும் பெரும் நட்சத்திரங்கள் வரையில் ஒவ்வொன்றிலும்
[1] தன்னியக்கச் சூழல் விரைவு (Self rotative force)
[2] ஒன்றால் மற்றொன்று தூண்டப்பெற்று தொடரியக்கம் (Chain action)
[3] மோதுதலிருந்து எழும் பிரதிபலிப்பு (Reflex action)
[4] அவ்வவதற்கேற்ற விளைவுகள் (Results)
என்று நான்கு வகையான இயக்கங்கள் நடைபெறுவதை உணருவோம். ஆகாசம் என்னும் நுண்துகள்கள் தான் விஞ்ஞானிகளால் Ethereal Particle அல்லது Electron என்று சொல்லப்படுகிறது. அது இயங்கும் இடத்திற்கேற்ப, அது பெறும் மாற்றம், சிறப்பு இவைகளிலிருந்து மின் அணு (Electron) கரு அணு (Neutron) துணைக்கரு அணு (Proton) எனப் பேசப்படுகிறது.
உதாரணமாக ஒரு குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்கள் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண்களில் ஒருவரைப் பேரன் என்றும், மற்றவரைத் தந்தை என்றும், மூன்றாமவரை தாத்தா என்றும் சொல்கிறோம். அதே போன்று பெண் வரிசையில் பேத்தி, அன்னை, பாட்டி என்று கூறுகிறோம். ஒப்பிட்டு நோக்கும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பரிணாமத்தால் உள்ள வேற்பாடு, உறவு, சிறப்பு இவைகளைக் கொண்டு தான் பெயர்கள் வேறு வேறாகக் கொடுக்கிறோம். மனிதன் என்ற நிலையில் எல்லோரும் ஒன்றே. இது போன்றே ஆகாசமெனும் பரமாணு, பரிணாமத்தால் அடைந்த பல்வேறு தனமைகளை ஒப்பிட்டு நோக்கும் அறிவு, பெயர்களை பலவாக ஆக்குகிறது. இது பிரித்து உணர்வதற்கு எளிதாக உள்ளது.
இந்தப் பகுத்துணரும் ஒப்புவமை நோக்கு (Relative Concept) புலன்களால் விளைந்த சிறப்பாகும். புலன்களை கடந்து நிற்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவு இவை அனைத்தையும் தொகுத்துணரும் போது பெறப்படும் உண்மை எல்லாமே ஒரு பொருள் என்பதாகும். அதுவே பொருள் நிலையில் ஒன்றாகவும், நிகழ்ச்சி நிலையில் வேறுவேறாகவும் உணரப் பெறுகின்றது என்பது விளங்கும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * *
“அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்
அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
முன்னாளில் சொல்லியுள்ளார், முற்றுணர்ந்த தெளிவால்
வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
அந்த பெரும் நன்நாளை வாழ்த்திவர வேற்போம்.”
“பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள்
பத்தாக விளங்கிக் கொள்வோம்.
பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்
மனம்அறிவாம் சிவமு மாகும்.
ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி.
இருப்பதுவே; ஆதி யாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
விண்ணாகும். அதிலெ ழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்
கலப்புற வான் காந்த மாச்சு.
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி
ஒளி சுவையும் மணம் மனம் ஆம்.
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
உள்ளுணர்ந்தால் அது மெய்ஞ் ஞானம்.
சிந்திப்போம், உணர்ந்திடுவோம், சேர்ந்திருப்போம்
இறைநிலையோ டென்றும் எங்கும் !”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூலை 20 : ஜீவ காந்த சக்தி
PREV : ஜூலை 18 : மனிதன்