x

ஜூலை 15 : எல்லாம் நன்மையே !

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


எல்லாம் நன்மையே !

“துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அல்ல; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிற போது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறை நிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக்கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தை கண்டு பிடிக்கிற போது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும்.

அப்படிப் பார்க்கின்ற போது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை. துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்? மனிதனிடம் தானே வரவேண்டும். இடம் கொடுக்கக் கூடிய மனிதனிடம் தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்துவிட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன்; வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு தான் இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை; உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை; நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு; இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதிலே ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத் தான் இருக்கும். வாழ்க்கையை ஓட்டிப் பார்த்தீர்களானால் எல்லோருக்கும் நிறைவாகத் தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பதே இல்லை.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

நிறை நிலையில் அமைதி :

“எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம்

இரவு பகல், சிறிது பெரிது, ஆண் பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம் வீரம்,

நட்டம் லாபம், என்ற அனைத்தும் தோன்றும்:

வல்லமையும் அதன் முழுமை நிலையாய் உள்ள

வரைகடந்த மெய்ப்பொருளாம் அகத்துணர்ந்தால்

அல்லலற்று அறிவு விழித்தும் விரிந்தும்

அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.”

அமைதியின்மை எதனால்?

“அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்


அறியாதோர் உடலளவில் எல்லையானார்

அறிவறிந்தோர் அறுகுணங்கள் நிறைவமைதி,

அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;

அறிவறியார் ஆறுகுணத்தால் பகை, பிணக்கு,

அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்

அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே

அமைதியின்மை விளைத்துளது மனிதர் வாழ்வில்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஜூலை 16 : துரியாதீத தவம் – பலன்கள்

PREV      :  ஜூலை 14 : உலகமே ஒரு கலா சாலை

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!