x

ஜூலை 13 : அறிவு நிலையில் வேறுபாடுகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


அறிவு நிலையில் வேறுபாடுகள் :

1] உடலறிவு :

மனிதனின் அறிவின் தரத்தை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பசி, தாகம், பாலுணர்ச்சிவேகம் ஆகியவற்றைச் சமன் செய்து கொள்ளுதல் மட்டும் தான் வாழ்க்கை என்ற அளவில் சில பேருக்கு அறிவு நின்று விடும். இதுவே முதல்படி. முன்னோர் சொன்ன அன்னமய கோசம் இது என்று சொல்லலாம்.

2] மனஅறிவு :

உடல் தேவைகள் நிறைவு பெற்றுவிட்டன என்ற பிறகு அவற்றுக்கப்பால் மனதின் தேவை என ஒன்று வரும். இயற்கை அழகுகளை ரசித்தல், அவற்றைப் போல் போலி செய்தல் என்ற அளவில் சிலருக்கு அறிவு விரிந்து நிற்கும். இதுவே இரண்டாம் பிரிவு. இதனை முன்னோர் சொன்ன மனோமய கோசமாகக் கொள்ளலாம்.

3] விஞ்ஞான அறிவு :

அறிவின் தரம் இன்னும் ஒரு படி உயரும்போது, இயற்கை நிகழ்ச்சிகளுக்கும், இயற்கை நியதிகளுக்கும் காரணம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாக அறிவு எழுந்து நிற்கும். இதுவே மூன்றாம்படி. இதனை முன்னோரின் விஞ்ஞானமய கோசம் எனலாம்.

4] இறையறிவு :

நியதி தவறாமல் இயக்கம் நடத்தும் அந்த இயற்கையின் தத்துவம் என்ன? அதனை ஆராயும் நான் யார்? எனக்கும் அதற்கும் தொடர்பென்ன? உறவென்ன ? என்று ஆராயும் பக்குவம் பெற்ற அறிவின் நிலையே அதன் நான்காம் படி. இதனையே முன்னோர் சொன்ன பிராணமய கோசத்துக்கும் அதன் முடிவான ஆனந்தமய கோசத்துக்கும் ஒப்பிடலாம்.

“அறிவுக்கு நான்கு நிலை இயற்கை தேவை
அவை மட்டும் நிறைவு கொளல் ஒன்று [இரண்டு] பொறி புலனால் இயற்கையெழில் ரசித்தல், மூன்று
பகுத்தறிவால் இயற்கை ரகசியங்கள் ஆய்ந்து
அறிந்து கொளல், அறிவித்தல்; நான்கோ அப்பால்
அத்தகைய இயற்கைக்கே மூலம் நாடி
அறிவதற்கென் றறிவெழுந்த நிலையாம். “

வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 14 : உலகமே ஒரு கலா சாலை


PREV      :  ஜூலை 12 : சங்க நோக்கம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!