x

ஜூலை 12 : சங்க நோக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


சங்க நோக்கம் :

முற்காலத்தில் கல்வி வாய்ப்பு குறைவாகவும், தொழில் வாய்ப்பு பெற்றோர்கள் மூலமாகவும் இருந்ததால் இளமை நோன்பு, இல்லறம், அகத்தவம், முழுமைப்பேறு எனும் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் நான்கும் பிரிவுபட்டே இயங்கி வந்தன. இப்போது கல்வி வாய்ப்பு பெருகிவிட்டது. தொழில்கள், விஞ்ஞானக் கருவிகள் இயந்திரங்கள் மூலம் எவரும் எத்தொழிலையும் புரியலாம் என்ற நிலை வந்துவிட்டது. வயதாலும், அறிவாலும், வளர்ச்சியிலா நிலையில் இருந்து கொண்டு மயக்க நிலையில் வாழ்பவர்களுக்கு பக்தியோகம் அவசியம் தான். ஆனால் இல்லற வாழ்வுக்கு வந்த பின்னர் படிப்படியாக ராஜயோகமும் ஞானயோகமும் இணைத்துக் கொள்ள வேண்டியதே.

இல்லத்தாரிடம் சூத்திரன் [உழைப்பாளி], வைசியன் [வாணிகன்], சத்திரியன் [ஆட்சியாளன்], பிராம்மணன் [மெய்ப்பொருளுணர்ந்தோன்], என்னும் நான்கு செல்வாக்குகளும் இக்காலத்தில் ஒன்றுகூடிவிட்டனபோல், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், நான்கும் இல்லறத்தாரிடம் ஒன்று கூட வேண்டும். அதாவது மனவளக்கலையாகிய ராஜயோகமும், மெய்ப்பொருள் உணர்வு எனும் ஞானயோகமும் இல்லத்தார்களுக்கு அவர்கள் வாழ்வோடு வந்து இணையும் வாய்ப்பு இக்காலத்தில் உருவாக வேண்டும்; பெருக வேண்டும். இல்லறம் புரியும் பெரும்பாலோரிடம் இத்தகைய தேவையுணர்வு உருவாகி ததும்பிக் கொண்டிருக்கிறது. அத்தேவைக்கேற்ப வாய்ப்புக் கிட்டாமையால் அவர்கள் அறிவுத்தேக்கமும், திசை மாற்றமும் சமுதாய வாழ்வில் பலவித கொந்தளிப்பு நிலைகளாக உருவாகிப் பெருகிவருகின்றன.

இந்த நிலைமையுணர்ந்து வேண்டுவோர்க்கும் தகுதியுடையோர்கட்கும் இல்லறத்திலேயே ராஜயோகம் பயின்று ஞானயோகம் என்ற முழுமைப் பேறு அடைய உதவி செய்யும் கடமையே உலக சமுதாய சேவா சங்கத்தின் பெருநோக்கமாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * *

 

வள்ளலார் அருள் :

“என்று எனை இராமலிங்க வள்ளல் பெருமானார்

எதிர் நின்று காட்சி தந்து அருளைப் பொழிந்தாரோ,

அன்று முதல் உடல் உயிரோடறிவை அருட் பணிக்கே

அர்ப்பணித்து விட்டேன் என் வினைத்தூய்மையாச்சு;

இன்று எந்தன் மனநிலையோ வள்ளற் பெருமானார்

எந்த செயல் செய்யென்று உணர்த்துவாரோ அதுவே


நன்று எனக் கொண்டவற்றை நான் முடிக்கும் பேற்றால்

நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 13 : அறிவு நிலையில் வேறுபாடுகள்

PREV      :   ஜூலை 11 : பக்தி – ஞானம்

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!