வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
ஆன்ம நிலை அறிவது ஏன்?
ஆன்மநிலையறிவதால் யாது பயன்? என்று சிலருக்கு ஒரு கேள்வி பிறக்கலாம்.
“பல காரணங்களாலும் வளர்ந்து கொண்டே இருக்கும் அறிவின் சக்தி புலன்கள் ஐந்திலும் இயங்கி தன் தத்துவங்களாகிய உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து பகுதிகளையும் அறிந்துவிட்ட பின் மேலும் வேகம் அதிகரித்து மீதியாகவும் அறியப்படாததும் ஆகிய தன் ஆதி நிலையை, அரூபசக்தி தத்துவத்தை, அறியும் ஆர்வமாக ஒரு எழுச்சி பெறுகிறது. இவ்வகையில் வேகம் கொண்ட அறிவுக்கு எவ்வளவு தான் புலன்களின் வாயிலாக அனுபோகங்கள் கிடைத்த போதிலும், அதனால் முழுத்திருப்தியும் அமைதியும் பெற முடியாது குறைவுபட்டே நிற்கிறது. அந்தப் பக்குவத்தின் தன்னிலையை அறிந்து விட்டால் எழுந்த வேகம் தணிந்து முழுப் பயன் பெற்று விடுகிறது.
உதாரணம் : ஒரு ஆற்றில் தண்ணீர் வருகிறது. குறுக்கே பல ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் இருக்கின்றன. ஆற்றுநீர் அந்தப் பள்ளங்களை நிரப்பும் வரையில் அதைத் தாண்டிப் போகாது. நிரம்பிவிட்ட பின் அதன் வேகம் மேலும் முன்னோக்கி ஓடுகிறது. ஒரு மேடு, மலை குறுக்கிட்டாலும் அதைச் சுற்றிக்கொண்டு சென்று கடைசியாகக் கடலில் சங்கமமாகிவிடுகிறது. அதன் வேகம் அத்துடன் முடிகிறது. அது போலவே அறிவின் வேகத்திற்கேற்றபடி புலன்களின் மூலம் இயக்கி, மிகுதி வேகம் தன்னையறிந்த பிறகு முடிவடைகிறது. மேலும் தன்னிலையாகிய ஆதி தத்துவம் அறிந்த பின், அங்கே அறிவின் தத்துவமும் அதன் இயக்கம், முடிவு என்பனவும் தெரிந்து விடுவதால் தானே பல உடலுருவாய் இயங்கும் ஒருமைத் தத்துவமும் இன்ப துன்பங்களின் காரணம் எழுச்சி மற்றும் அனைத்தும் தெளிவாக விளங்கி விடுகின்றன. இந்நிலையில் அறிவு அமைதியைப் பெறுகிறது.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * *
“ஆகாசம் உயிராக இருக்கிறது. அது உடலில் இயங்குவதால் உடலுக்கு ஒரு
காந்த இயக்கம் கிடைக்கிறது”
“ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க வகையில்
பயன்படுத்தி ஒழுங்குபடுத்திவிட்டால்
அதுவே ஞானமாகவும் மலரும்”.
“அவரவர் வாழ்வைச் சீரமைக்கும்
அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே”.
“வெளிச்சத்திலே இருள் நிறைந்திருப்பது போல
அறிவிலே தெய்வம் என்ற நிலை இருக்கிறன்றது”.
“இறை நிலையோ டெண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உரைந்திந் நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோகும் தன் முனைப்பு காணும் தெய்வம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூலை 03 : சித்து
PREV : ஜூலை 01 : ஊனுடம்பே ஆலயம்