x

ஜூன் 30 : கணவன் – மனைவி நட்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கணவன் – மனைவி நட்பு :

“கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால் மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது. நமது மனவளக் கலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். நட்பையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும். சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பமில்லாமலிருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும் அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும் வாழ்த்தியும் வந்தால் நிச்சயம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பங் கொள்வார்கள்.

பல மக்கள் வாழ்வில் தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெறுங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

“குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்

உறுதியான, நெருக்கமான, உண்மையான

இனிய நட்பு நிலவ வேண்டும்”.

“கணவன் மனைவி நட்பு தான்

உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது”.

“வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது பிறர்

உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு

இனிய நட்புறவை வளர்க்கிறது”.

“வாழ்க்கையிலே மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது கணவனை

மனைவியும், மனைவியை கணவனுமே”.

“அருவநிலையாய் இயங்கும் அறிவு வாழ்வில்

அவ்வப்போ தொருபொருளின் தொடர்பு கொண்டு

மருவிநிற்கும் நிலைகளைச் சொற்குறிப்பால் காட்ட

மாற்றுப் பெயர்கள் பல உண்டு, அவற்றுள் ஆண்பெண்

இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில்வாழ

எண்ணத்தால் முடிவுகண்டோ செயலில் கொண்டோ

ஒருவர் ஒருவர்க்கு உடல்பொருளோடாற்றல்

உவந்து அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல்.”

இளமை நோன்பு, இல்லறம், தொண்டு :

“வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயிற்சி ஏற்கும் முறையை

வகைப்படுத்த இளமை நோன்பாகும்; பொறுப்போடு


வாழ்வாங்கு வாழ ஒரு வாழ்க்கைத் துணை ஏற்று

வழியோடு கடமையுணர்ந்தாற்ற இல்லறம் ஆம்;

வாழ்வினிலே மறைபொருளாம் உயிர் அறிவை உணர

வளமான உளப்பயிற்சி அக நோக்குத்தவமாம்;

வாழ்வதனை முற்றுணர்ந்து அதை அமைதி வெற்றி

வழிகண்டு வாழவைக்கும் பேரறமே தொண்டு”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 01 : ஊனுடம்பே ஆலயம்

PREV      :  ஜூன் 29 : அமைதி நிலைக்க

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!