x

ஜூன் 25 : அறிவின் முழுமை

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்


அறிவின் முழுமை :

“அறிவு” என்பது உண்டா இல்லையா? இல்லை என்று யாருமே சொல்ல முடியாது. ஆனால் அறிவு எப்படி இருக்கிறது? எந்த பொருளுக்காகிலும் எந்த விஞ்ஞானத்துக்காகிலும் எந்த கருவிக்காகிலும் அடங்குமா? புலன்களால் காண முடியுமா? முடியாது. அப்படியானால் அது என்ன? அரூபம். முழு முதற் பொருளாகிய ஆதி நிலை, வெட்டவெளி, சிவம் என்று சொல்லக் கூடியது அரூபமா ரூபமா? அதுவும் அரூபம் தான். அரூபத்தில் இரண்டு இருக்குமா? இந்த கேள்விதான் உண்மையை உணர்த்தக் கூடிய கேள்வி.

ரூபமாக இருந்தால் எல்லை (Volume) கட்டிவிட முடியும். எண்ணிக்கைக்கு உட்படுத்திவிட முடியும். (It would be circumscribed and subject to the numbering process). ஆனால் அரூபம் இரண்டு இருக்க முடியாதே ! இரண்டு பூஜ்யம் (zero) என்னவாகும்? ஒரு சைபர்தானல்லவா? அதுபோல அறிவும் பிரம்மமும் ஒன்றுதான். அந்த பிரம்மம் என்ற நிலையிலே, முழு முதற் பொருளாக, சுத்த வெளியாக, இந்த பிரபஞ்சத்தையும் தாண்டி அப்பாலும் சூழ்ந்து உள்ளது. அதுவே அணுவாகி இயங்கிப் பிரபஞ்சமாக இருந்து கொண்டிருக்கிறது; அந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொரு பொருளிலும் தன்மையிலும் இருந்து கொண்டு உயிர்களில் இவைகளையெல்லாம் உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றலாகவும் இருக்கிறது. ஒரே ஒரு பொருள் பல இயக்கங்கள். இந்த உண்மையை மனிதன் உணரும்போது தான் ஆறாவது அறிவு முழுமை பெறுகிறது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

“அணுவாயும் தனித்தனியே இயங்கிக் கொண்டு

ஆறாகவும் காட்சியளிக்கும் நீர்போல்

அணுவாயும் கூட்டுறவாய்க் காட்சியாகும்

அகண்ட பேரண்டத்தில் தோற்றமெல்லாம்

அணு நிலையை பருஉருவில் உணரவல்ல

அறிவு தான் உயிருணர்வாம் அதற்கு மேலும்

அணுவுக்கு ஆதிநிலை பிரம்மம் என்று

ஆழ்ந்துணர்ந்த அறிவே மெய்யுணர்வு ஆகும்”.

அகத்தவத்தின் பெருமை :

“உயிருணர்வே ஆன்மாக்கள்

உய்யவழி காட்டும்.

உள்நாடி அமைதிபெற

உண்மை தெளிவாகும்.”

“இருபுருவ மையத்தில் இருள் நீக்கி அருள் விளக்கும்

ஒருவாசல் உண்டதுவே உயிர் நிலையை உற்றுணரும்

திருவாசல் உயிர் அறிவாய் தெய்வநிலை எய்தும் வழி


கருவாசலும் ஞானக்கண் என்பதும் இதுவே”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 26 : அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு

PREV      :   ஜூன் 24 : இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு

நாளொரு நற்சிந்தனை:



Like it? Please Spread the word!